பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

185

போன்ற துன்பமான முறையை அறவே விடுத்து மிகச் சுலபமான சொற்களால் பல சாதாரண உவமைகளின் துணை கொண்டு எளிய நடையில் பொருளின் நுட்பம், புதைந்த கருத்து, தருக்கமுறை முதலியவற்றைச் சுவாமிகள் விளக்கும் போது இளம்பிள்ளைகளும் பெண்மக்களும் கண் சாம்பாது முகஞ்சுளியாது ஒளிவீசுங் கண்களோடும் மலர்ந்த முகங்களோடும் செவிவாயாகச் சொல்லமிர்தம் பருகுங் காட்சியைக் கண்காள் காண்மின்களோ வேறு சிலர் உபந்நியாசங்களில் நுவலப்படும் பொருளை அறியமாட்டாது இடர்ப்பட்டுக் கேட்போர் பலர் தம்முள் வேறு பொருள்களைப்பற்றிப் பேசிச் சந்தடி செய்து கேட்கும் சிலரையும் கேட்கவொட்டாது தடை செய்யும் காட்சியைக் கண்காள் காணற்க 'அவையறிந் துரைத்தல்" என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் “ஒளியார்முன் ஒள்ளியராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்" என்னுங் குறளுக்கு இலக்கியமாயுள்ளவர்கள் சுவாமிகளேயென்பதைக் காண்டல் கருதல் உரையென்னும் மூவகைப் பிரமாணத்துள் காட்சியளவிலேயே அறியக்கூடு மென்பதை வற்புறுத்தவே காட்சிகள் சிவலற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கூறினேன்; பின்னும் கூறுவேன்.

3. சுவாமிகள் தமிழில் நிரம்பிய பற்றுடையவர்கள் என்பதை யறியாதார் யாரேயுளர்? திருமுறைகளிலும் கந்தரநுபூதி போன்ற பனுவல்களிலும் சிவஞானச் செல்வர்கள் திருவாக்கிலுமுள்ள சொல்லாழம், பொருளாழம், சொன்னயம், பொருணயம் முதலியவற்றைச் சுவாமிகளைப் போல வேறு யாவரே எடுத்துக் கூறுவர்? ஒரு சொல்லின் முழுப் பொருளையும் முழு நயத்தையுமறிய ஒரு நாள் போதாதே சுவாமிகள் பெரிய புராணத்திற் சில செய்யுள்களையும் கந்தரநுபூதிப் பாக்களையும் பாடமாகக் கூறக்கேட்டோர் தாம் "கற்றது கைம்மண்ணளவு கல்லாதது கடலளவு” என்றல்லது வேறென்ன கூறுவர்? “தம்மினுங் கற்றாரை நோக்கிக் கருத்தமிழக எற்றே இவர்க்கு நாம் என்று" எனத்தமது மனத்துத் குரைத்தலைக் தவிர சுவாமிகளைக் கண்ட புலவர் வேறென் செயவல்லார்? கண்ணப்ப நாயனார் புராணப் பிரசங்கத்தில் நாயனார்க்குத் திண்ணன் என்ற பிள்ளைத் திருநாமம் ஏற்பட்டதை விளக்கித் தமிழ்ப்பற்றை யூட்டும்போது சுவாமிகள் தமிழார்வத்தைக் கண்டு மகிழாதார் யாவர்? பேபி யென்றும் ரோஸ் என்றும் அறியாது பெயரிட்ட தாய் தந்தையர் வெட்கித்தலை குனிவதைக் காணாதவர் யாவர்?