உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

189

களைப் பாராட்டி நடக்கும் நவநாகரிகம் நிரம்பப் பெற்றவர்கள். தங்களுடைய சமய ஒழுக்கத்துக்கும் துறவொழுக்கத்துக்கும் இன்றிமையாதனவற்றை ஒரு சிறிதும் நெகிழ விடாது ஏனைய வழிகளில் அன்பர்கள் விண்ணப்பத்துக் கிணங்கி அவர்களை மகிழ்வித்துத் தாமும் மகிழும் பெருமை வாய்ந்தவர்கள். சில அறிஞர்களைக் கழகங்கள் அழைப்பதென்றால் மிகுந்த பணச் செலவும் உடலூழியமும் வாய்ந்த ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். சுவாமிகள் அவ்வாறின்றி அன்பர் கட்கெளியராக விரும்பிப் போந்து தொண்டாற்றி ஆசீர்வதிப்பதைத் தமிழ்நாடு நன்கறியும். தங்கள் திருமடத்தில் அன்பர்களையும் காணவரும் பேரறிஞர்களையும் ஆரவாரமின்றி உள்ளன்போடு சுவாமிகள் உபசரிப்பதைக் கண்டு இல்லறத்தார் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

9. சுவாமிகள் தம்மையடைந்த இளைஞர்கட்குக் கல்விபுகட்டி அவர்களை நல்வழிப்படுத்தித் தகுந்த உத்தியோகங்களில் தக்கார் துணைகொண்டு அவர்களை அமர்த்தி அவர்களுடைய நல் வாழ்க்கையைக் கண்டு இன்புறுவதை நம்மிற் பலரறிவர். சில பெரும் புலவர்கள் தம்மை யடைந்தவரை ஓம்பாது அவர்களைத் தங்கள் சாசுவத அடிமைகளாகப் பாவித்துத் தங்கள் புத்தக வேலை, அச்சுவேலை, ஆராய்ச்சி வேலை முதலியவைகளில் அவர்களைச் சிற்றாள்களாகப் பணிவித்து வேலைக்கேற்ற ஊதியமோ, புகழ்ச்சொல்லோ நன்றியோ செலுத்தாத வன்கண்ணராக வெறுக்கப்படுவதையும் நாமறிவோம். சுவாமிகளுடைய உதவியால் கல்வி பெற்றவர்களையும் வேலையிலமர்ந்தவர்களையும் இத் தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணலாகும். மந்திரி முதல் மந்தமதியிறாகவும் லக்ஷாதிபதி முதல் பிக்ஷாதிபதியிறாகவும் உள்ள பலதிறப்பட்ட பலதரமுடைய மக்களோடும் பழகி அவர்கள் நன்மதிப்பைப் பெற்றுத் தம்மையடைந்தவர்கட்கு உபகாரம் செய்யும் வழி அவர்கள் நட்பையும் தமது செல்வாக்கையும் பயன்படுத்திப் புகழ் கொள்ளும் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராகச் சுவாமிகள் திகழ்கின்றார்கள்.

10. சுவாமிகள்தம்மையடைந்து வேண்டுவார் வேண்டுவதே ஈயும் கொள்கையுடையவர்கள். விரும்பிக் கேட்போர் வசதி ஒன்றையே நோக்கிக் தங்கட்கு ஏற்படும் சிரமத்தை ஒரு சிறிதும் பொருட்படுத்தாது கேட்போர் விண்ணப்பத்துக்கிணங்குவ தொன்றையே சுவாமிகளுடைய பெருங்கருணையறியுமல்லாது பிறிதொன்றில்லை. மிருகவைத்திய சாலையிற் பணி