உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

197

ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் பட்டத்துக்கு வந்த ஐம்பதாவது வருஷ பூர்த்திக் கொண்டாட்டத்தைச் சென்ற 18-19 ௳களில் சுவாமிகளின் சீடர்களும், தமிழன்பர்களும் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடினார்கள். முறையே அறுபதாவது, எழுபதாவது, எண்பதாவது வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களையும் நடத்துவதற்குத் தமிழ் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இறைவன் அருள்புரிய வேண்டும்.

சிவத்திரு ஞானியாரடிகளின்
பொன்விழா ஆசிமொழி

உலகம் உயிர் இறை என முப்பொருள் உண்டு. இவற்றினும் வேறு பொருளில்லை. இம்முடிபு வேதாகமாந்த முடிபு. ஆன்றோர்கள் அறுதியிட்டு அறைவது. இம்மூன்றனுள் உலகம் இருத்தலை மட்டும் உடையது; உயிர் இருத்தலையும் அறிவினையும் உடையது; இறையோ இருத்தலையும் அறிவினையும் இன்பத்தினையும் உடையது. உயிரினறிவு சிற்றறிவு. இறையறிவு முற்றறிவு. உலகம் அறியாமை உடையது. உயிர் அறிவும் அறியாமையும் உடையது. இறை அறிவினையுடையது. எங்கெங்கு அறிவு உண்டோ அங்கங்கு அநுபவம் உண்டு. அறிவினளவே இன்ப அளவு; நீரின் அளவே நீர்ப்பூவின் தண்டின் அளவு. அமுதுபடி வெண்ணிறம் உடையது. உயிர் அறிவினையுடையது. அமுதுபடியின் வெண்ணிறம் விளங்காதவாறு உமி மூடியிருக்கும். உயிரினறிவு விளங்காதவாறு அறியாமை மூடியிருக்கும். மூடியிருக்கும் உமி நீக்கத்தக்கது; மூடியிருக்கும் அறியாமை நீங்கத்தக்கதே. தானே உமி நீங்காது. தானே அறியாமை நீங்காது. குற்றுவோரின்றி உமி நீங்காது. ஞானாசாரியரின்றி அறியாமை நீங்காது. குற்றுவோர் ஒருமுறைக்குப் பலமுறை குற்றி உமியை நீக்கல்வேண்டும். ஒருமுறைக்குப் பலமுறை உபதேசித்து இறையாகிய ஞானாசாரியர் அறியாமையை அகற்றல் வேண்டும். குற்றுவோனுக்கு உமியைப் போக்க முழுப்பலம் வேண்டும். ஞானாசாரியர்க்கு அறியாமையைப் போக்க முழு ஞானம் வேண்டும். அமுது படியின் வெண்ணிறம் தானே விளங்காது. விளக்க விளங்கும். உயிரறிவும் தானே விளங்காது. விளக்க விளங்கும் உயிரினறிவை விளக்க மற்றொரு உயிர்க்கு ஆற்றலில்லை. சேற்றை மற்றொரு சேறு கழுவாது;