பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வல்லிக்கண்ணன்


சென்ற இடங்களிலெல்லாம் சொன்மழை பொழிந்து சிவானந்த ஆறு கரை புரண்டோடச் செய்தார்கள் சுவாமிகள். செவிமடை வழியே உள்ளமாம் நிலத்தில் தேக்கிச்சிவப் பயிரை வளர்த்துக் கொண்டு முத்திப் பயனாம் பெரும் பேற்றினை அடைந்தார் பலர் என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஞானியாரடிகள் வீரசைவர். வீரசைவ மரபுகளைப் பின்பற்றும் மடாலயத்தின் தலைவர். வீரசைவர்கள் சிவனையன்றி வேறு தெய்வங்களை மனசாலும் நினைக்கக் கூடாது என்ற நெறியைக் கைக்கொண்டவர்கள். ஆயினும் ஞானியாரடிகள் சாதிசமய பேதம் கருதாது, எல்லா மதத்தினருக்கும் கல்வி பயிற்று வித்தார்கள். திருமால் குறித்தும், இராமாயணம் பற்றியும், பாரதம் பற்றியும் மிகச் சிறப்பான முறையில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். அவர்களுடைய பேச்சில் பிறமத துஷணை தலைகாட்டியதில்லை. எடுத்துக் கொண்ட பொருள் பற்றி, கேட்போர் நெஞ்சம் நெகிழும் விதத்தில், அருமையாகப் பேசுவார்கள். ‘விபீடணர் சரணாகதி குறித்து அடிகள் ஆற்றிய உரை கேட்டு, அரங்கன் அடியார்கள் மெய் சிலிர்த்து ஞானியார்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டார்கள். வைணவர்களே வியப்படையும் விதத்தில், திருப்பாவையின் ஒரு பாசுரத்தை விளக்கி, வைணவ பரிபாஷைகளால் நீண்ட நேரம் சொற் பொழிவாற்றிய பெருமை அடிகளுக்கு உண்டு.

காலத்தின் மதிப்பை நன்கு உணர்ந்தவர்கள் ஞானியாரடிகள். எதையும் காலம் தவறாது செய்யும் இயல்பு அவர்களிடம் இருந்தது. பிறரும் அவ்வாறே காலத்தின் அருமை உணர்ந்து செயல்படுமாறு தூண்டுவார்கள். சொற்பொழிவு இன்ன நேரத்தில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த நேரத்துக்கு முன்னதாகவே அடிகள் அந்த இடம் சேர்ந்துதயாராக இருப்பார்கள்.

ஞானியாரடிகளின் சிறப்பியல்புகள் குறித்து அவர் காலத்திய அறிஞர்கள் பலரும் பாராட்டிப் புகழாரம் சூட்டத் தவறியதில்லை. பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அடிகள் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார் -

“கடவுள் பக்தியும் சிறப்பாக முருகப் பெருமானிடம் பேரன்பும் உடையவர்கள். கல்வியறிவுடையோரை நன்கு மதித்து அளவளாவும் இனிய குணம் உடையவர்கள். தமிழ் மொழியில் பேரார்வத்தையும் சைவ சமயப் பற்றையும் தமிழ் மக்களுக்கு விளைத்து வந்த இவர்கள் அரிய சொற்பொழிவுகள்