பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

19

இத்தமிழ்நாட்டில் நிகழாத இடமில்லையென்றே சொல்லலாம். மடாதிபதிகள் செய்ய வேண்டிய அரிய செயல்களெல்லாம் திரு. ஞானியாரிடத்து நன்கு காணப்பட்டன. இக்காலத்துள்ள மற்றைய மடாதிபதிகள் இவர்கள் முறையைப் பின்பற்றுவார்களாயின் தமிழ் உலகத்திற்கே சிறந்த பயன்விளையும். இவர்கள் ஒழுகிய நெறி ஏனையோருக்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளதென்று கூறலாம்."

திரு.கா. இராமநாதன் செட்டியார் பி.ஏ.பி.எல். அடிகளின் பெருமைகளை மிகத் தெளிவாக விவரித்திருக்கிறார்.

“அவர்களுக்கு இவ்வளவு பெருமை ஏன்? அவர்கள் நன்கு படித்தவர்கள். ஆங்கிலம் தெரியும். வடமொழி நன்கு தெரியும். தமிழில் அவர்கள் படிப்பு பரந்தது, ஆழமானது. இத்துடன் உலகியலறிவும் உண்டு. கற்றார்க்கும், கல்லாதார்க்கும் பயன்படும்படி பேசவல்லவர்கள். இனிமையாகப் பேசுவார்கள். அவர்கள் அன்பு நிறைந்தவர்கள். எல்லாருக்கும் புன்சிரிப்பு; சில நல்ல வார்த்தை மடாதிபதிகள் என்ற நினைப்பு அவர்கள் வார்த்தைகளையோ, செயல்களையோ சுட்டவில்லை விருந்தினரை நின்று விசாரிப்பார்கள். உளறுபவர்க்கும் கோபமின்றி அறிவு புகட்டுவார்கள். எல்லாரும் அவர்களைப் பார்க்க முடியும். எப்போதும் பார்க்கலாம். அவர்கள் செய்த தொண்டுகள் பல. தங்கள் மடத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார்கள். அதற்குப் பெரும் புகழ் தந்தார்கள். பலருக்குத் தமிழறிவு புகட்டினர். கிறிஸ்தவர்களும் அவரிடம் படித்திருக்கிறார்கள். பலருக்குச்சமய அறிவு புகட்டினர். அநேகர் மனதில் அன்பெனும் விதையை நட்டார்கள். பற்பலர் வாழ்க்கையைத் திருத்தி யமைத்தனர். அவர்களிடம் உபதேசம் பெற்றோர்கணக்கற்றவர். அவர்கள் சொற்பொழிவு கேட்டோர்.பல்லாயிரவர். ஊர்தோறும் சென்று சைவ உண்மைகளைப் பரப்பியவர் சமயகுரவர் மூவர். அவர்களுக்குப் பின்னர் அத்தொண்டு செய்தோர் ஒருவரையும் எனக்குத் தெரியவில்லை. அத்தொண்டை இக்காலத்தில் செய்தவர்கள் ஞானியார் சுவாமிகள்" இவ்வாறு இராமநாதன் செட்டியார் குறிப்பிட்டுள்ளார்.

அடிகளின் தோற்றப்பொலிவாலும், பேச்சாற்றலினாலும், மற்றும் பல சிறப்பியல்களினாலும் ஈர்க்கப் பெற்ற அறிஞர்கள் அநேகர் பலவாறாக அடிகளைப் பாராட்டி வியந்து போற்றி எழுதி மகிழ்ந்திருக்கிறார்கள்.