பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

25

சொற்பொழிவை ஆற்றித் தேவரை அமுத நீராட்டினார். அதோடு மதுரையில் தமிழ் வளர்ச்சிக்குச் சங்கம் அமைக்க வேண்டும் - என்ற வேண்டுகோளை வைத்தார். சுவாமிகளின் சொல்லமுதை மாந்திய தேவரவர்கள் அப்படியே செய்கிறேன் என்று வாக்களித்தார். அதன்படி 1901-ல் மதுரையில் தமிழ்ச்சங்கமும் தமிழ்க்கல்லூரியும் அமைந்தன. என்னே சுவாமிகளின் நாநலம்!!

நிறுவனங்கள் - சபைகள் - சமுதாயப்பணிகள்

வாணிவிலாச சபை, ஞானியார் மாணவர் கழகம் என்ற நிறுவனங்களை ஏற்படுத்தி ஆண்டு விழாக்களில் தலைமை ஏற்று ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சைவ சமயத்தின் ஏற்றத்தையும், தமிழின் பெருமைகளையும், தமது சொற் பெருக்கால் உரையாற்றி சமயப் பணியையும், தமிழ்ப்பணியையும், ஒரே சமயத்தில் நிறைவேற்றுவார். மற்றும் பல தனிகர்களுடைய உதவியால் ஆங்காங்கு பக்தபால சமாஜம், பஜனை கூடம் என்று நிறுவி பக்திநெறியைப் பரப்பிய பெருந்தகையாளராகவும் அடிகளார் விளங்கியுள்ளார். மற்றும் சிறுவர்களுக்கு கல்வியறிவூட்ட ஆரம்ப பாடசாலைகள் பல நிறுவப்பட்டன. சைவ சமய நெறி தழைக்க இளைஞர்சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. மற்றும் மலையமான், ஒளவையார், கபிலர் போன்ற பெருவள்ளல்கள், புலவர்களின் வழிவந்தவர்கள் என்று பார்க்கவ குல மரபினரைப் பாராட்டி அவர்களுக்காக ஒரு சங்கமும் அமைத்து சமூக சேவை புரிய வேண்டும் என்று அச்சங்கத்தினர்க்குக் கட்டளையிட்டு சமுதாய முன்னேற்றத்திலும் தம் கடமையைச் செய்துள்ளார்.

அடிகளார் வெள்ளமடை திறந்தாப்போல் ஆற்றும் சைவ சமய சொற்பொழிவுகளும், தமிழ் மணக்கும் சொற்பொழிவுகளும் அவர்கால மக்களை வெகுவாக ஈர்த்தன. சுவாமிகளின் சொற்பொழிவுகளில் சாமானியர்கள் மட்டுமல்லாமல் அவர் காலத்தில் வாழ்ந்த பெரும்புலவர்களும், பெரும்கவிஞர்களும் தங்களை இழந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தகவர்கள் பலர். சுவாமிகளின் வேண்டுகோளை ஏற்று கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் புலவர் கல்லூரி நிறுவிய வழக்கறிஞர் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை பி.ஏ., பி.எல்., அவர்கள், தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், கயப்பாக்கம் சதாசிவ செட்டியார், மோசூர் கந்தசாமி புலவர் ச. சச்சிதானந்தம் பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார்,