பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வல்லிக்கண்ணன்

அறக்கட்டளையின் செப்புப் பட்டயத்தை எடுத்துக் கொண்டு, பன்னீர் செல்வம் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு திருப்பாதிரிப்புலியூர் வந்தார்.

அந்த அறக்கட்டளையின் பட்டயத்தில் பொதுவாக “கல்வி வளர்ச்சிக்குப் பணியாற்ற“ என்றே அதன் குறிக்கோள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே - தமிழையும் அக்கல்லூரியில் கற்பிக்கலாம் என்பதை அடிகளார் முன்னிலையில் மற்ற இருவரும் தீர்மானித்தர்கள். -

தஞ்சை திரும்பியதும் அவர்களிருவரும் அக்கல்லூரியில் தமிழ் வித்துவான் கல்வியும் கற்பிக்க ஏற்பாடு செய்தார்கள்! வடமொழிக் கல்லூரி என்னும் பெயரையும் பொதுவாக அரசர் கல்லூரி (RAJAS COLLEGE) என்ற பெயராக மாற்றியமைக்கப் பட்டது. அக்கல்லூரியில் பயின்ற தமிழ்ப் புலவர் பதினாயிரக் கணக்கானவர் - என்று பெருமை பொங்கிட - அடிகளாரின் தமிழ்ப் பணி பற்றி ஞானியார் அடிகளார் - நூலில் குறிப்பிட்டிருக்கிறார் சுந்தர சண்முகனார். அதுமட்டுமின்றி,

“அடிகளார் தாமே தமிழ்க் கல்வி நிறுவனம் தொடங்கி நடத்தியதல்லாமல், தமது முயற்சியால், நமது மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமையச் செய்தது மாபெரும் தமிழ்த் தொண்டாகும். அடிகளாரின் தமிழ்ப் பற்றுக்கு இன்னொரு இமாலயச்சான்று உண்டு. 1938ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாக்கப் பட்டபோது, அடிகளார் இந்தியை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள்; அந்த அறிக்கையை யானே - பல இடங்களில் பல சுவர்களில் ஒட்டியுள்ளேன்“ என்று கூறும் சுந்தரசண்முகனார், -

“தமிழ் கற்பதும், தமிழில் பேசுவதும் தாழ்வென்றும், தமக்குத்தமிழ் தெரியாது என்று சொல்வதைப்பெருமை என்றும் கருதிய கோடாரிக்காம்புகள் மிகுதியாக இருந்த காலத்தில், அடிகளார் இவ்வாறு தமிழ் இயக்கம் தொடங்கி நடத்தியது மிகவும் போற்றத்தக்கதாகும்” என்கிறார் தமது நூலில்!”

தமிழை நீசபாஷை என்று கருதி ஆலயங்களிலிருந்தும் கூட விரட்டத் துடிக்கின்ற அயல் இன மடாதிபதிகளின் வட மொழி வெறியையும், தமிழ்த் துவேஷத்தையும் இன்று கண் கூடாகக் காணும்போது தமிழ் வளர்த்த ஞானியாரடிகளின் பெருமை இமய உச்சியையும் தாண்டிய எல்லை காணமுடியாத பெருமையாகவே தோன்றுவதில் வியப்பென்ன?