பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

41


இன்று மடாதிபதிகள் என்போர் விமானத்தில் பயணம் செய்கிறார்கள்; மடத்துக்கு அருகிலேயே விமான தளம் அமைத்துக் கொள்கிறார்கள். விஞ்ஞான யுகத்தில் அப்படிப் பட்ட பயணங்களை அவர்கள் மேற்கொள்வதை யாரும் குறை சொல்வதற்கு இல்லை.

ஆனால், ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை - தமிழில் குடமுழுக்கு என்றால் "பழமை விட்டுவிடக் கூடாது; மரபைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்" என்று அப்போது மட்டும் பழைய பழக்க வழக்கத்தை சுட்டிக்காட்டி - தமிழுக்கு இடமில்லை என்கிறார்கள்; ஆனால் பக்தர்கள் மூலம் பழைமை வாய்ந்த தங்களது மடத்தை இடித்து நாலு கோடி ருபாய் செலவில் புதிய குளுகுளு வசதி செய்யப்பட்ட மாளிகையைக் கட்டிக் கொள்கிறார்கள்! விமானப் பயணத்துக்காக தனி விமானம் விமானதளம் என்று புதுமையில் புகுந்து விளையாடுகிறார்கள். அப்போதுதான் இவர்கள் பழைமை மரபு ஆகமம் - சாஸ்திரம் என்று பேசுவதெல்லாம் எவ்வளவு பாரபட்சமானது. ஓரவஞ்சனை மிகுந்தது என்பது தெளிவாகிறது.

ஞானியாரடிகள் தலைமையில் புதுவையில் நடந்த கலைமகள் கழக ஆண்டுவிழாவில் பேசிய தமிழ் முனிவர் திரு.வி.க. "அடிகளார் மோட்டார் காரையோ புகை வண்டியையோ பயன்படுத்தாமல் சிவிகையில் (பல்லக்கில்) மட்டுமே செல்லுதல் என்ற பழைய மரபைத் தொடர்ந்து கடைபிடித்து வருவதால் எண்ணற்ற மக்கள் அடிகளாரின் சொல்லமிழ்தத்தை அருந்தும் வாய்ப்பு இல்லாதவராயுள்ளனர். என்போன்றோரும் சில ஊர் மக்களும் அடிகளாரின் உரையை விரும்பிக் கேட்டது போலவே பல ஊர்மக்களும் கேட்டு மகிழ விரும்புவார்கள் அல்லவா? அடிகளார் சிவிகையிலேயே செல்லுவதால், தொலையில் உள்ள ஊர்கட்கெல்லாம் வேண்டியபோதேல்லாம் விரைந்து செல்லமுடிவில்லையே. அடிகளாரின் சொல் உணவை மாந்தித் திளைக்க சென்னை மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

பழைய மரபை விட முடியாது பழைய மரபுப் படி சிவிகையை விடமுடியாது என்றால் யாங்கள் பெரிய மோட்டார் கார் அமைத்து அதன் மேல் சிவிகையை வைக்க ஏற்பாடு செய்வோம். அடிகளார் சிவிகையில் அமர்ந்தபடியே மோட்டார் வண்டி மூலம் இடம் விட்டு இடம் போகலாம். இந்த வேண்டுகோளை அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று கோரினார்.