உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வல்லிக்கண்ணன்

பல அய்யங்கள் தோன்றுகின்றன. அறிதொறும் அறிதொறும் அறியாமை இயல்புதானே அவற்றைத் தொடர்புடைய நூல்களைக் கற்பதன் மூலம் தெளிவு பெறமுடியும் எனும் எண்ணத்தையும் அவை ஊட்டி நிற்கின்றன.

ஞானியாரடிகள் எனும் பெயர் என் செவிகளில் எப்படியெல்லாம் விழுந்து வந்தன என்பதைக் குறித்துக் கூறி இருக்கிறேன். 1980களின் நடுவில் பெரியாரின் முதல் குடியரசு ஏட்டைப் பற்றி ஓர் ஆய்வு நூலைத் தோழர் முருகு இராசாங்கம் என்பவர் வெளியிட்டார். என் பார்வையில் அந்நூல் கிடைக்கவும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அந்நூலின் ஆய்வு சில ஆய்வாளர்களின், அரசியல் இயக்கத்தாரின் பொறுப்பின்மையைச் சுட்டிக் காட்டியது. அவரது ஆய்வில் ஞானியாரடிகள் இடம் பெறுகிறார் என்பது தனிச்சுவையான செய்தியாகும்.

ஈ. வெ. இராமசாமிப் பெரியார் ஒரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்று எண்ணுகிறார். அவர் இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர பங்கெடுத்து 1922-இல் கோவைச் சிறையில் இருக்கும்போதுதான் பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார். பெரியார் 1925-இல் குடியரசு எனும் ஏட்டைத் தொடங்குகிறார். பொதுவாக எல்லோருமே குடியரசு ஏட்டை-முதல் இதழை ஞானியாரடிகள் வெளியிட்டு இருக்கிறார் என்றுதான் கூறுகிறார்கள்; எழுதுகிறார்கள்.

தோழர் முருகு, இராசாங்கம் எழுதிய நூல்தான் ஞானி யாரடிகள் குடியரசு முதல் இதழினை வெளியிட்டுப் பேசவில்லை. குடியரசு அலுவலகத்தைத் திறந்து வைத்துதான் பேசினார். அவர்பேசிய பேச்சு குடியரசு முதல் இதழில் இடம் பெற்றிருப்பத்திலிருந்தே இது உறுதியாகிறது என்று அவரது ஆய்வு நூலில் கூறியிருந்தார்.

குடியரசு முதல் இதழிலிருந்து 22 இதழ்கள் கிடைக்காமையால் ஆய்வாளர்கள் சில குழப்பங்களை ஆய்வுகளில் மேற்கொண்டனர். அந்த இதழ்களில் முதல் இதழை எங்கேயோ அகன்றாழ்ந்து எடுத்த முருகு, இராசாங்கம் பல செய்திகளை வெளிக் கொணர்ந்தது போலவே ஞானியாரடிகள் அலுவலகத்தைத் திறந்து வைத்து அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதியையும் வெளியிட்டிருந்தார்.

ஞானியாரடிகள் ஆற்றிய அந்த உரையின் பகுதிதான் என்ன?