பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வல்லிக்கண்ணன்

குறிப்பன அன்று. அறிவு ஒரு பொருளைக் கண்ணால் பார்க்கும். ஞானமோ அதன் நன்மை தீமைகளை முடிவெடுக்கும். எப்போது? அறிவு, பகுத்தறிவாக விரிகிறபோது ஞானம் ஏற்படுகிறது. ஞானம் இலது உளது என இரு கூறுகளை வழங்கு கிறது. இலது என்பதை பெரியார் சிக்கெனப் பிடித்துக் கொண்டார். அதை அவர் நன்மை என்றே கருதி மக்களுக்கு எடுத்துரைத்தார். இது ஞானியாரடிகளிடத்திலேயிருந்து கிளைத்து எழுந்த மறுபக்கமாகும். இங்கே இதைவிரித்து எழுதுவது ஏற்புடையதன்று.

ஆகவே ஞானியாரடிகளின் குடியரசு பேச்சு உணர்த்துவது என்ன? வள்ளலார்க்குப் பிறகு ஆன்மீகத் துறையில் இருந்த ஒரு பெரியார் சமயத்திலுள்ள குறைபாடுகளை ஒப்புக்கொண்டு ஓர் இயக்கமாக இயங்கி செயலாற்றினார் என்றால் அவர் ஞானியாரடிகளைத் தவிரவேறு எவருமிலர் என்று துணிந்து கூறலாம். ஞானியாரடிகள் வடமொழி, ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளைக் கற்றவர். ஆனாலும் மொழியின்றி சமயமில்லை எனும் கொள்கையில் உறுதியாக நின்றவர்.

இவரிடம் நம்மால் இன்னொரு சிறப்பையும் காண முடிகிறது. சைவ, வைணவ பிரிவுகளையும் அதன் உட்பிரிவுகளையும் பற்றி எந்தவித சலனமும் கொள்ளாமல் அவரவர் விரும்பி அழைத்து இன்னபொருளில் உரையாற்ற வேண்டும் எனக் கேட்டோர்க்கு உரிய வகையில் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்தார் ஞானியாரடிகள்.

ஞானியாரடிகளின் சொற்பொழிவு பல ஆழமான செய்திகளைக் கொண்டதாகும். துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய சமய சார்ந்த மெய்யியல் பற்றிய அவரது விளக்கம் - நூல்களில் அதனைப் பாகுபடுத்தி கூறியிருக்கும் விதம் அக்கால சமய அறிஞர்களை அசத்தி இருக்கவே செய்திருக்கும். அதற்குக் காரணம் ஞானியாரடிகள் மிக நுட்பமாக நூல்களை ஆய்ந்தறிந்து செய்திகளைச் சொன்னதுதான்! மேலும் சைவ சித்தாந்தத்துக்கு அத்வைதத்தில் 'எந்த இடம்’ என்பதை இவர் நுட்பமாகக் காட்டுவதிலிருந்து சமயத்திலும் வடமொழியிலும் ஞானியாரடிகளுக்கு இருந்த புலமையின் ஆழத்தைக் கண்டு அறியமுடிகிறது. இந்த இடமே மறைமலை யடிகளை, திரு.வி.க.வை இவர்பால் ஈர்த்த இடங்களாக இருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.