உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வல்லிக்கண்ணன்

பண்டித மற்றும் புலவர் வகுப்புகளை நடத்தின. செந்தமிழ், தமிழ்ப்பொழில் ஆகிய திங்கள் இதழ்களை வெளியிட்டன. இவ்விரு ஏடுகளையும் புரட்டிப் பார்த்தால் வெளிவந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய சிறப்பைத் தனித்தன்மையை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.

சைவாதீனங்கள் பெரியதோ சிறியதோ அவையெல்லாம் ஒரு கட்டத்தில் அதிகார மய்யங்களாகவே விளங்கின. பேரரசுகள் வீழ்ந்து, சிற்றரசுகளும் தன்னிலை இழந்து தாழ்ந்தபோது மக்களை அதிகாரம் செலுத்துகிற சமயம் சார்ந்த அமைப்புகளாக தமிழகத்தில் மடங்கள் விளங்கின. ஒரு கட்டம் வரைதான் இவ்வமைப்புகளின் ஆளுமைகள் பொலிவோடு இருந்தன.

ஆட்சிமுறைகளில் ஜனநாயகம், அறிவியல் சாதனைகள், உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு ஆகியன தோன்றியவுடன் மனிதகுலத்தில் பெரிய மாறுதல்களை உருவாக்கின. சைவாதீனங்கள் தமிழகத்தில் தோன்றி முடிவுறுகிற காலகட்டத்தில் உலகெங்கும் மொழிவழி தேசியங்கள் உருக்கொள்ளத் தொடங்கி இருந்தன. ஆனால் தமிழகத்தில் சைவாதீனங்கள் அப்பணியை மொழியை சமயத்தோடு குழைத்துத் தந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்னே உருவாக்கித் கொண்டிருந்தன.

19ஆம் நூற்றாண்டுக்கும் 20ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த ஞானியாரடிகள் தமிழ்த் தேசியத்துக்கு ஒரு முன்வரவை ஏற்படுத்தி தந்ததுறவியாவார்.

பெரும்பாலான சைவ மடங்கள் இருந்த இடத்திலேயே அதிகாரத்தை செலுத்திக் கொண்டே வரவு - செலவு பார்த்த காலகட்டத்தில் சிவிகை ஊர்ந்து சமயப் பொறையோடு தமிழ்ப் பணியாற்றிய ஒரேதுறவி ஞானியாரடிகள் ஆவர்.

சற்றொப்ப 50 ஆண்டுகள் சமயமும் தமிழுமாக தமது வாழ்வின் பணிகளாகக் கொண்ட ஞானியாரடிகள் தேர்தல் முறை முழுமையாகாத ஆனால் தேர்தல் முறையின் மூலம் ஆட்சி அமைக்கும் காலகட்டங்களில் வாழ்ந்தவர்.

இந்திய விடுதலை இயக்கமும், நீதிக்கட்சியும் சுய மரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் அவ்வவற்றின் வழியில் போராடியபோது ஞானியாரடிகள் வாழ்ந்தார் என்றாலும் இவர் யாரையும் எதற்காகவும் சென்று அணுகாதவராக, உண்மை துறவியாக வாழ்ந்து இருக்கிறார்.