(திரு. மு. அருணாசலம், எம்.ஏ., அவர்கள்) (1959)
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், தமிழ் நாட்டின் நடுவில் வாழ்ந்து, தமிழ் மக்களின் வாழ்க்கையை மிக நீண்ட காலம் எல்லா வகையாலும் உருவாக்கியவர் என்றால், கற்றறிந்தவர்களுக்கு ஞானியார் சுவாமிகளின் கண்டிகை அணிந்த திருவுருவமும் சீல வாழ்க்கையும் குளிர்ந்த பார்வையும் மனத்தில் எழும். சுவாமிகள் திருக்கோவலூராதீனம் என்ற சிறந்த ஞான பரம்பரையிலே தலைமை ஏற்றவர். சிவ வேடப் பொலிவு நிரம்பப் பெற்றவர். முதுமையினால் திருமேனி தன்னில் அசைவு உடையவர். சைவத் திருமுறைகளை ஓதி ஓதி உருகும் நெஞ்சினர். பக்திப் பெருக்குடையவர். தமிழ் இலக்கிய இலக்கணக் கடலை நிலைகண்டுணர்ந்தவர். தம் சமயப் பிரசாரத்துக்கு ஏற்ற வகையில் வடமொழியறிவும் நிரம்பியவர். விவகாரத்திற்கான ஆங்கில அறிவு படைத்தவர்.
அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் நாட்டில் சைவ மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் சென்று, ஆடம்பரம் எதுவும் அறியாதவராய், தம் சொந்தத் தகுதியொன்றையே துணையாகக் கொண்டு, சுவாமிகள் மக்களை நல்வழிப்படுத்தி வந்தார். சைவம் என்ற உணர்ச்சி இல்லாத மக்கள், சற்றே ஆங்கிலம் படித்து உத்தியோகத்தில் அமர்ந்தவர்கள், நாஸ்திக வாதமே நாவின் நுனியில் பயில்பவர்கள் -திருநீறு என்றால் சாம்பல் பூசுவது; உருத்திராக்கம் என்றால் கொட்டை கட்டுவது - இப்படிப்பட்ட பேச்சுக்கள் மலிந்த உலகம். பலவகையான அரசியல் - சமூகப் பூசல்களும் கலந்து, வாழ்க்கையைக் குழப்பி, எவ்வகையான உறுதியும் பண்பாடும் முன்னேற்றமும், ஆழமும் அகற்சியும் நுட்பமும் உட்புக முடியாதவாறு செய்திருந்த காலம். அத்தகைய சூழ்நிலையில் சுவாமிகள் எல்லோருக்கும் ஒரு சமய தீபமாக விளங்கிய தோடன்றி, பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயத்தில் சமய தீபத்தை ஏற்றியும் வைத்தார்கள். இதை வேறு ஒருவரும் இத்துணைப் பேரளவில் செய்ததில்லை. சுவாமிகள் சொல்லாலும் பார்வையாலும், பழக்கத்தாலும், உபதேசத்தாலும் இன்று தமிழ்நாட்டில் படித்த குடும்பங்கள் நிரீசுவர வாதத்தை விட்டு, புதிதாகச் சைவ சமயத்தைக் கண்டு, திருமுறை பயின்று,