உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வல்லிக்கண்ணன்

எண்ணம் உதிப்பது இயல்பல்ல. ஆதலால் குழந்தை பார்த்துக் கொண்டே ஒரு வாயில் தூண்மீது சாய்ந்து கொண்டு நின்றது. பல்லக்கு நகர்ந்தது. சுவாமிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே நின்ற குழந்தையைச் சுவாமிகள் பார்த்தார்கள். பல்லக்கை நிறுத்தச் சொல்லிக் குழந்தையை அழைத்துத் திருநீறு கொடுத்தார்கள். ஒரு வயதுக் குழந்தை - பல்லக்கு சரியாக எட்டக்கூட இல்லை. அவர்கள் குனிந்து குழந்தையின் நெற்றியில் திருநீறிட்ட தோற்றம் இன்னும் என் கண் முன்னே நிற்கின்றது.

குழந்தைக்கும் சமயப் பிரசங்கத்துக்கும் வெகுதூரம். ஆயினும் ஒரு சம்பவம் நான் மறக்க முடியாதது. 1936 ஆம்ஆண்டின் தொடக்கத்தில் சுவாமிகள் மாம்பலத்தில் வைத்தியராமன் தெருவில் நீண்டகாலம் தங்கியிருந்தார்கள். தினமும் இரவில் 7 மணி தொடங்கி 10 மணி வரை சமயப் பிரசங்கங்கள் நடைபெறும். தவறாது என் மனைவியும்நானும் சென்று கேட்டு வருவதுண்டு. என் மகளும் உடன் வருவது வழக்கம். அப்பொழுது அவள் ஒன்றரை வயதுக் குழந்தை. சுவாமிகள் தாமிருந்த வீட்டின் தெருத் தாழ்வாரத்திலிருந்து கொண்டு பேசுவார்கள். நீளமான தாழ்வாரம், மூன்று நீண்ட படிகள். கீழே பந்தல் போட்டு சமுக்காளம் விரித்திருக்கும். கேட்போர் அதில் இருந்து கேட்பார்கள். குழந்தையோ என்னோடு உடன் வந்து பத்து நிமிஷம் பக்கத்திலிருக்கும். பிறகு எழுந்து சுவாமிகள் இருக்குமிடம் சென்று அவர்கள். பக்கத்தில் ஒரு முழத்துரம் தள்ளி உட்காரும். முதல் நாள் உட்கார்ந்த பொழுது கூட்டத்தில் இருந்த ஓர் அன்பர் குழந்தையை அப்பால் போகும்படிச் சொன்னார். ‘இருக்கட்டும்’ என்று சுவாமிகள் சொல்லி விட்டார்கள். அது முதல் தினமும் குழந்தை தவறாமல் அங்குப் போய் உட்கார்ந்து கொள்ளும். படியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு அவர்களைப் பார்த்தபடியே மூன்று மணி நேரமும் இருக்கும். அவர்கள் தோற்றப் பொலிவில் ஈடுபட்டதோ, பேச்சின் ஒலியில் ஈடுபட்டதோ, பாட்டின் இசையில் ஈடுபட்டதோ- யாரும் சொல்ல வியலாது. பச்சைக் குழந்தை மூன்று மணி நேரம் தூங்கி விழாமல், தொந்தரவு செய்யாமல் அப்படியே இருந்தது, நினைத்துப் பார்த்தால் இன்னும் எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. கூட்டம் முடிந்து எல்லாரும் திருநீறு பெறும்போது தானும் வாங்கிக் கொண்டு என்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும்.