பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வல்லிக்கண்ணன்

‘விநாயகனே வெவ்வினையே வேரறுக்க வல்லான் என்ற பதினொராந்ததிருமுறைச் செய்யுள், தந்தைதாய் ஆவானும் என்ற குருவணக்கச் செய்யுள் போன்ற அனேகம் பாடல்கள் இவ்வாறு தமிழ்ச் சைவ நன்மக்களிடையே பிரசாரத்துக்கு வந்தன. இவ்விதமே பிரசங்க முடிவில் 'உருவாய் அருவாய்’ என்ற கந்தரனுபூதிச் செய்யுளையும், ஆறிருதடந்தோள் வாழ்க என்ற முருகப் பெருமான் வாழ்த்துச் செய்யுளையும், அவர்கள் இறுதியில் கூறிமுடிக்கும்போது கேட்டார் மனத்தில் இவை மிக்க சாந்தி அளிப்பனவாயிருக்கும். சுதந்திர இந்திய நாட்டில் கூட்ட முடிவில் நாட்டு வாழ்த்துப் பாடுவது இப்போது ஏற்பட்டுள்ள புதிய சம்பிரதாயம். ஆனால் சுவாமிகள் தம் கூட்ட முடிவில் இவ்விதம் சாந்தி தரவல்ல முருகன் வாழ்த்துப் பாடி முடிப்பது மிக்க தீர்க்க திருஷ்டியைக் காட்டுகிறது.

அன்றியும், கூட்டத்தினரை விளிக்க அவர் உபயோகித்த சொல் “மெய்யன்பர்களே“ என்பது. இன்று கூட்டங்களில் இச்சொல் காதில் விழும்போது, அவர்களுடன் பழகிய அனைவருக்கும் ஒரு கணம் சுவாமிகள் நினைவு உள்ளத்தில் தோன்றி மறையாமல் இராது.

மற்றொன்று, பேச்சிலே அவர்கள் முடிவான ஒரு கருத்தை நோக்கிப் பல துணைச் செய்திகளைச் செலுத்தும் போது, ஒவ்வொன்றையும் முற்றுப் பெறாத, சிறு சிறுதொடர்களாகச் சொல்லி, இறுதியில் கருத்தைக் கொண்டு முடிப்பார்கள். அவ்வாறு அவர்கள் தொடர்களை நிறுத்தி நிறுத்திச் சொல்லும் முறை தனியான ஓர் அழகுடையதாயிருக்கும். அதுவே ஒரு கலை, நேரில் கேட்டவர்களுடைய உள்ளத்தை அது ஈர்க்க வல்லதாயிருக்கும். இன்று மேடையில் பேசும் பண்டிதர்கள் அனைவருமே அந்தப் பாணியைக் கடைப்பிடிக்கிறார்கள்.

இங்ஙனமாக, தமிழ்ப் பேச்சு, சமயப் பேச்சுகளில் அவர்கள் ஒரு புதிய பாணியைத் தோற்றுவித்தார்கள் என்பது பலரும் உணர்கின்ற உண்மை. அவர்களுடைய பாணியையே பின்பற்றி இன்றைய பேச்சாளர் அனைவரும் பேச்சில் வல்லவராகி இருக்கிறார்கள்.

சுவாமிகளின் ஐம்பதாண்டு ஆட்சி விழாவை முன் குறிப்பிட்டேன். அவ்விழாவில் பங்கு கொண்டவர்கள், அவர்களுடைய விருந்தோம்பும் பண்பை அனுபவித்திருப்பார்கள்.