தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
67
படித்தோர், படிப்பில்லாதோர், அந்தஸ்துடையவர், இல்லாததவர் எனப் பலரும் அடங்கிய பெருங் கூட்டம், அக்கூட்டத்தில் எல்லாப் பந்திகளுக்குமிடையிலே அவர்கள் போய்ச் சாப்பாட்டில் ஒவ்வொரு சிறு அம்சத்தையும் விசாரித்தது, விருந்தோம்புவோர் காட்ட வேண்டிய பரிவுக்கு இலக்கணமாய் அமைந்திருந்தது.
இங்ஙனமாக, தமிழ்நாட்டின் சரித்திரத்தையும் தமிழ் மக்களுடைய முன்னேற்ற இயக்கங்களின் சரித்திரத்தையும் ஆராய்ந்தோமானால், எல்லாத் துறைகளிலும் ஞானியார் சுவாமிகளின் வாழ்க்கை ஊடுருவி நின்றமை தெரியவரும். எந்த நிலையிலும் அவர்கள் அரசியல் - சமூக இயல்களில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்களுடைய பேச்சாலும், வாழ்க்கையாலும், மக்கள் சமயப் பற்றும் தமிழ்ப் பற்றும் கொண்டார்கள்; மறைமுகமாக இது நாட்டுப் பற்றுக்கு வித்தாயிருந்தது என்பது மிகையன்று. தமிழ் இலக்கண அறிவு, இலக்கிய உணர்ச்சி, தமிழ்ப் பண்பாடு வளர்ந்தன. கோயில்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாயிற்று. இறைவன் திருநாம முழக்கம் எங்கும் எதிரொலித்தது. சிவ சின்னங்கள் பகிரங்கமாய் கண்ணில் புலப்பட்டன. தெய்வப் பெயர் சொல்லுவது படித்தோருக்கு இழிவு என்றிருந்த நிலைமாறி, படித்தோரிடம் தெய்வ பக்தியும், சமய உணர்ச்சியும், சாத்திர அறிவும் துலக்கம் பெறத் தொடங்கின.
இந்த இருபதாம் நூற்றாண்டில் முதல் நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்ட இந்தச் சமய உணர்ச்சியும் எழுச்சியும் இன்னும் ஒரு நூற்றாண்டுக் காலமேனும் நம்மிடையே உயிர் கொண்டிருந்தது நம்மை முன்னோக்கிச் செலுத்தும் என்பது உறுதி.
★★★★