பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வல்லிக்கண்ணன்

மாணாக்கர்கள் இல்லாவிட்டால் பரீஷைக்குப் போகும் மாணாக்கர்கள் வருவார்கள்; (தமிழ் அனுபவிக்கக்கூடியது, அனுபவிப்பதற்காகவே ஏற்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது) மடத்துக்கு வரும் மாணாக்கர்களோ, ஆனந்த அனுபவம் தூண்டியே வருபவர்கள்.

எல்லாம் ரூபாய் அணா பைசாக் காரியமாய்ப் போய், கூடுகிற கூட்டமெல்லாம் பொறாமைப்பேயும் பகைமைப் பேயும் ஆட்டிவைக்கும் கூட்டமாயிருக்க, தமிழ்ப் பண்பாட்டில் உண்மையான ஆர்வங் கொண்டு, தமிழர்கள் கூடித் தமிழை ஆராய்கிறார்கள், அனுபவிக்கிறார்கள் என்றால், எவ்வளவு பெரிய விஷயம்! தமிழ் வளர்ச்சிக்கு, ஞானியார் சுவாமிகள் மடாலயம் பண்பட்ட நாற்றங்கால்.

தமிழ்நாடு புத்துயிர்பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ் மகள், சுவாமிகளுக்கு அரிய உருவத்தையும் உடல் நலத்தையும், கணீர் என்று ஒலிக்கும் வெண்கல நாதத்தோடு கூடிய குரலையும் அளித்தாள். எவ்வளவு விரிவாகவும் சிக்கலாகவும் இருந்த போதிலும், விஷயங்களின் ஒவ்வொரு உறுப்பையும் அதற்கு இயைந்த இடம் அமைத்து முறைப்படுத்தி நிர்மாணம் செய்யக்கூடிய அபூர்வமான அறிவுவிளக்கத்தையும் கொடுத்தாள். எல்லாவற்றிற்கு சிறப்பாக, பொறுமை, அடக்கம், அன்பு, பக்தி ஆகிய உயர்ந்த இதயதத்துவங்களையும் அளித்தாள்.

"சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி
மனப்பழக்கம்-நித்தம்
நடையும் நடைப்பழக்கம்;
நட்பும் தயையும்
கொடையும் பிறவிக்
குணம்.”

ஆம், பிறவிக் குணந்தான் என்று சுவாமிகளுடன் பழகிய பின் தெரியவரும்.

இத்தனை அரிய பேறு தமிழகத்துக்குக் கிடைத்திருக்கிறது. சுவாமிகளுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அவர்களுடைய இதய கமலத்திலே சதா குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் அருள்வாராக!

இதய ஒலி(நூல்)