பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வல்லிக்கண்ணன்

பனிமலர்க் குழற் பார்வை நல்லாரினும் இனியன் என்ற நாவுக்கரசர் தன்னடைந்தார்க்கு என அருளி அவனையடைய வழிதேடக் கொள்ளவன்றோ நம்மைத் தூண்டுகிறார்? இத்தகைய பாசுரங்களைப் பயிலும் போதெல்லாம் நம்மை மனிதராக்கிக் கொள்ள நாம் முயல வேண்டும் என்பதற்காகவே ஈங்கு இவற்றை எடுத்துக் காட்ட முனைந்தோம்.

அமர வாழ்வுக்கு ஆசான் : இயல்பாகவும், சூழ்நிலை காரணமாகவும் நமக்கு அமைந்துள்ள அறிவுத் திறனைச் சோதித்தறிந்து, ஏற்ற வகையிற் பக்குவம் சொல்லி, நம்மை அமர வாழ்வினுக்கு அழைத்துச் செல்வார் நமக்குத் தேவை. அவர் நாம் பயிலும் நிலைக்கும் மேற்பட்ட தகைமையாளராயிருத்தல் வேண்டும். விருப்பு, வெறுப்புகட்கு ஆளாகாத நிலையினராய், அருள் நிரம்பி, ஆன்ற அறிவும், தெளிந்த தூய சிந்தையும் உடையவராயிருத்தல் வேண்டும். அவரே குரு, தம் பரந்த கலை யொளியால் எப்பாலவரையும் தம்பால் ஈர்த்து ஆட்கொள்ளும் குருநாதர். இவ்வுலகில் மனிதரோடு மனிதராய் இருப்பார் எனினும் அவர், இறைவனே யாவர். குருவே சிவன் எனக் கூறினான் நந்தி என்ற திருமூல நாயனார் வாக்கும், அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி யருளிய பெருமையைச் சிறுமை யென்றிகழாதே என்ற மாணிக்க வாசகர் வாக்கும் நாம் கருதற் பாலன. அத்தகைய பெருமை வாய்ந்த குருநாதரை நாம் தேடியடைதல் வேண்டும். அடைந்து அவர் காட்டும் தூய நெறி நிற்றல் வேண்டும். ஒரு சிறுகால எல்லையில் நம்மை அவர் சிறந்த பயன்பெறச் செய்யவுங் கூடும்; பல காலங்கடத்தலும் கூடும். நமக்கு உளத்தூய்மை உண்டாகுமளவும் குருநாதர், தம் ஏவலாலும் சுற்றுச் சார்பிற் பயிற்றலாலும் ஆட்கொள்வார். நாம் நம் முன்வினைப் பயனும் அறிவாற்றலும் பயன்தருங் காலம் வருமளவும் கொடிறும் பேதையும் கொண்டது விடா, தெனும் படியே ஆகி நல் இடையறாத் தொழும்பு பூண்டு நற்பேறெப்துதலைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

மக்கள் வாழ்வினைச் செம்மைப் படுத்த அவ்வப்போது ஆங்காங்கே குருமார் தோன்றுவர். இம்முறையில் இம் மடாலய முதற் குருநாதர் பற்றி மட்டும் இங்குக் குறிப்பிடுதல் கடமையாகும்.

வீர சைவம் : ஒழுக்கம் விழுப்பந் தருவது. ஆதலால் அதனை உயிரினும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றார்