பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வல்லிக்கண்ணன்

சோமநாத 'ஆராத்திரியர் பத்ததி’ என்று அவர் பெயர் கொண்டே வழங்கிப் போற்றப்பெற்று வருகிறது. அந்நூல், வீரசைவ மரபினர்க்கு ஓர் அருநிதியமாவது, அவர் வழித் தோன்றலாய் விளங்கிய மல்லைய தேவரும், அவர் மனைவி பிரமர குந்தளாம்பாவும், அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றி வந்தனர். எனினும் புத்திரப் பேறின்றி வருந்தினர்.

பழநியாண்டவன் திருவருள் : மல்லைய தேவர்க்குப் பற்பல இடங்களிற் சீடர்கள் இருந்தனர். காங்கேயத்தில் அக்காலை வதிந்திருந்த சீடராம் மூன்று கவுண்டர்கள் அழைப்பிற் கிணங்க மனைவியோடு போந்தார். அவர்கள் விரும்பியவாறே பூசை எழுந்தருள்வித்தும், புராண விரிவுரைகள் ஆற்றியும் யாவரையும் மகிழ்வித்து இறையடிப் பற்றுக் கொள்ளத் துணை நின்றார். ஆயினும் அவரைப் பிள்ளையில்லாக் குறை வாட்டவே, பழநிப் பதியினையுடைந்தார். கணவன் மனைவியர் இருவரும் பழநியாண்டவன் திருவடி பரவித் துதித்துச் சில நாள் அங்குத் தங்கினர். ஆத்மகூருக்கு மீண்டனர். ஆண்டவனருளால் பின்னர் அவருக்கு இரு பிள்ளைகள் தோன்றினர். மூத்தவர் சுப்பிரமணியம், இளையவர் மல்லையர். தங்கள் தந்தையைப் போன்றே இருவரும் கல்வி கேள்விகளில் வல்லவராயிருந்தனர். இளையவர், சிறுபருவத்திலேயே துறவற வொழுக்கமே சிறந்ததெனத் துணிந்து ஸ்ரீசைலம் சென்று துறவியாகி மனமடங்குந் திறத்தினிலே இருந்துவிட்டார். மூத்தவர், தம் அம்மான் மகளாம் சுப்பம்மாவை மணந்து இல்லற நெறியில் ஈடுபட்டனர். பல காலம் கடந்தும் பிள்ளைப் பேறற்ற குறை அவர்களயுைம் வாட்டியது. தாம் பிறந்தது பழநியாண்டவன் திருவருளால் என்பதை உணர்ந்திருந்த சுப்பிரமணிய அய்யர், மனைவியோடு பழநியடைந்தார். பரமனடி பணிந்து குறையிருந்தார். சில நாள் அங்குத் தங்கினார். தைமாதம் வந்துற்றது. பூச நாளின் முன்னாளாகிய புனர்ப் பூசத்திரவில் பழநியாண்டவன் இருவர் கனவிலும் தோன்றி பரமென விளங்கும் நற் புதல்வன் தோன்றுவான் என அருளி மறைந்தான். அதிகாலையிற் கண்ட கனவால் இருவரும் மகிழ்ந்து பரமனைத் துதித்தனர். சண்முக நதியில் நீராடிச் சரவணபவனைத் தொழுதனர். கணாரதனை புரிந்து அடியர் பூசனையையும் முடித்தனர். சில நாள் அங்குத் தங்கியபின், குன்று தோறாடும் குமரன், அலைவாயதனில் நிலை இய பண்பினைக் கண்டு தொழும் விருப்பினராய்த் திருச்செந்தூர் சேர்ந்தனர்.