பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வல்லிக்கண்ணன்

ஆறுமுக குரு, கல்வி, கேள்வி, இட்டலிங்க பூசனை, சிவாலய தரிசனம், மனமடங்குந் திறத்தில் இருந்து அட்டாங்க யோக முதலியவற்றால் பெருஞானம் பெற்றார். அவர்களுக்குத் தூல பஞ்சாட்சரத்தினைத் திருவருணைக் குரு நமசிவாயர் உபதேசம் செய்து சிவலிங்கதாரணமும் செய்து வைத்தார். சூக்கும பஞ்சாட்சரம், கோவல்- பெரிய நாயகித் தாயாராலும் காரண பஞ்சாட்சரம், ஆராத்ரிய உருவம் தாங்கிவந்த கடவுளாலும், ஞானோபாய சாதனைகள் வீரட்ட நாதராலும் உபதேசிக்கப் பெற்றன. இளந்துறவியின் முன், ஆறுமுகக் கடவுள் தோன்றி, இதனினும் மேலாம் மந்திரம் இல்லை யென்றருளிப் பிரணவ உபதேசம் செய்வித்தான். ஒரு மொழி மகாவாக்கியமும் உணர்த்தியருளி மறைந்தான்.

இவ்வருந் துறவிக்குத் திருநீற்றுப் பையும், அக்கமணி மாலையும் இறைவனாலே அளிக்கப் பெற்றன. அவை இன்றும் இம் மடாலயத்தில் பூசனை பெறுகின்றன.

ஞானியார் : திருவருணைக் குகை நமசிவாயர் பரம்பரையின் எட்டாவது குரு நமசிவாயருக்கு உபதேசித்துத் தலைமை யேற்குமாறு செய்த இவ்வருட்குரவருக்கு, ஆறாங்குரு நமசிவாயர் ஞானியார் என்ற சிறப்புப் பெயர் அணிவித்தார். அன்று முதல், அப்பெயரே வழங்குவதாயிற்று.

திருமடங் காணல் : பற்பல அருஞ் செயல்களை ஆற்றிவந்த நம் தபோதனர்கள், தமக்குப் பின்னரும் ஞான பரம்பரை ஒளிரவேண்டு மென்னும் அருள் நோக்கத்தால், ‘சண்முக ஞானியார்' என்று போற்றப் பெறும் ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளை மடாலயத் தலைமை யேற்று எழுந்தருளச் செய்து கலி, 4870, மாசி 27 அநுடங் கூடிய குருவாரத்தன்று பரசிவபர ஆகாச வெளியில் கலந்தருளினார்கள்.

அவர்கள் எழுந்தருளிய காலத்தே பல அற்புதங்கள் நிகழ்ந்தன. மன்பதைகள் உய்யும் வண்ணம், இறைவனால் தனக்கு அளிக்கப் பெற்ற நிட்டானுபூதி நூலைத் தொண்ணுாற்றொரு செய்யுள்களாக அருளியுள்ளார்கள். அந் நூலுக்கு முத்துக்கிருட்டின பிரமம் என்பார் அரியதோர் உரை எழுதியிருக்கிறார். அவ்வுரை, வடலூர் இராமலிங்க வள்ளலாரை யுள்ளிட்ட இருபதின்மார் தந்துள்ள சாற்றுக் கவிகளுடன் பெருமை பெற்றது. இப்போது அச்சாகி வெளிவந்துள்ளது. நிட்டானுபூதி சாரமேயன்றி மேலும் முப்பது நூல்கள் அவர்களால் அருளப் பெற்றன. சில அச்சாகி வெளிவந்துலவு கின்றன. சுவாமிகள் அருளிய நூல்கள், இயல், இசை, நாடகத் தமிழ்