உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வல்லிக்கண்ணன்

முற்றம், பழையாறை என்ற இடங்களைத் தலை நகராகக் கொண்டிருந்தனர். அவை குடந்தை, கும்பகோண்ம் என்ற திருக்குடமூக்கினை அடுத்து உள்ளவை. திருக்குட மூக்கில், சைவ - வைணவ ஆலயங்கள் மிக மிக அதிகம். அத்தனையும் சமயகுரவராலும், ஆழ்வார்களாலும் பாடப் பெற்ற சிறப்பினையுடையன.

ஊர் : திருக் குடமூக்கினுக்கு வடகிழக்கின் கண்ணே, சற்றேறக்குறைய 5கி.மீ. (3மைல்) தொலைவிலமைந்திருப்பது, திருநாகேச்சுரம் எனும் சிறப்பமை நகர். பரந்த சிவாலயத்திலே, நாகேச்சுரன் எழுந்தருளி அருள் வழங்குகிறான். அப்பரமனை, நாவரசர் பெருமான், இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை நச்சுவார்க்கு இனியர்’, ‘நாடறி புகழர் , நற்றுணையாவர்’, ‘நம்புவார்க் கன்பர்’, ‘தேனர்' , 'தீர்த்தர்’ என்றெல்லாம் புகழ்ந்தமையே யன்றித் 'திருநாகேச்சரத்துளானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே' எனவும் சிறப்புறப் போற்றிப் புகழ்கின்றார். திருஞானசம்பந்தப் பெருமானும், சுந்தரமூர்த்தி நாயனாரும்பாடிய பதிகங்களை யும் பெற்றுள்ள தொல்பதி அஃது.

பெற்றோர் : அந்தப்பதியில் வீரசைவர் பலர் இன்றும் வாழ்கின்றனர். வீரசைவ குடும்பத்தவருக்கெல்லாம் குருவாய் விளங்கிய பெரியார், அண்ணாமலை அய்யர். அவர் தம் இல்வாழ்க்கைத் துணைவியார் பார்வதியம்மை. இவ்விருவரும் இறையன்பு தோய்ந்த செம்மன முடைய வர்கள். அருளுள்ளங் கொண்டு அண்ணலடியவரை அருத்தியுண் பவர்கள் தம் முந்தையோர் கொண்ட முறைப் படியே, திருப்பாதிரிப்புலியூர் பூர்மத்ஞானியார் மடாலய குருமூர்த்திகளைக் குருவாகக் கொண்டவர்கள். அடிக்கடி திருப்பாதிரிப்புலியூர் வந்து குருவின் திருவடிகண்டு மனத்தெளிவு முதலிய பெற்றுச் செல்வர். வீரசைவ தெறிபற்றிக் கனாராதனை முதலிய சிவ சீலங்களில் ஈடுபட்டு, விளங்கியவர்களாவர்.

தோற்றம் : பார்வதி யம்மையார் வயிறு வாய்ந்திருந்தனர். நாம் செய்த முன்னைத் தவப்பேற்றின் பயனாக, கலி 4973, ஸ்ரீமுக ஆண்டு, வைகாசி மாதம் 4ஆம் நாள் (17-05-1873) வியாழக்கிழமை இரவு 10-30 மணியளவில் மூல விண்மீனும், பிரதமை திதியும் தனுசு லக்கினமுங் கூடிய நல் வேளையில் ஆண் மகவொன்றினைப் பெற்றெடுத்தார்கள்.