பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

93

யாவன : “கூடியவரை அதிகாலை 4 மணியளவில் எழுந்து ஒரு மைல் அளவாவது நடந்து சென்றோ, உடற்பயிற்சி செய்தோ, முடித்தவுடன் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும் உடல் வரை மட்டுமல்லாமல் தலை மூழ்கல் வேண்டும். அதற்கு ஓடும் நீராயின் மிக நன்று ; அருகில் இல்லையேல் குளம் முதலாம் நீர்நிலையில் நன்கு திளைத்தாடுதல் நலம். அதுவும் இல்லையேல் நன்றாகக் கை வலி எடுக்குமளவும் கிணற்றில் நீர்முகந்து தலைக்கு விட்டுக் கொள்ளல் நலம்.“ என்பனவாம். அங்ஙனமே அவர் செய்துவந்து சில நாள்களுக்குள் முற்றும் நலமுற்றுத் தேர்வு எழுதினார். தேர்வில் மாநிலத்தில் முதல்வராகத் தேர்ச்சியுற்றுத் திருப்பனந்தாள் மடத்தின் 'ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப் பரி'சாகிய ஆயிர ரூபாயும் பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறாக ஒழுக்க நெறிகளைத் தாம் கடைப்பிடித்துக் கண்ட பயன் காரணமாகவே யாவர்க்கும் வழி காட்டியருளியமை தெளிவு.

பழநியாண்டியாம் இவ்வரும் பெரும் பிள்ளை நாடோறும் நியமந் தவிராது ஒழுகிப் பள்ளியிற் பயின்ற தோடன்றி, முன் கற்ற தெலுங்கு மொழி நூல்களையும் தம் குருநாதர் கற்பித்த வடமொழியிலும் பயில்வார்கள். பதினாறு வயதளவில், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், வடமொழிகளை யறிந்திருந்ததேயன்றித் தம் குருநாதரிடம் சித்தாந்த சாத்திர நூல்களையும் பயின்று வந்தார்கள்.

அறப்பள்ளித் தலைமை

பதினாறு வயது நிரம்பிப் பதினேழாம் வயது நடந்து கொண்டிருந்த காலத்திலே, மடாலயத்து நான்காம் குரு மூர்த்திகள் - ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் நாற்பத் தோராண்டு பட்டமேற்றிருந்த பின்னர், திருவருள் நிலையெய்தும் நிலை வந்துற்றது. அடுத்துப் பட்டமேற்க வேறொருவரைச் சுட்டி உயில் எழுதி வைத்தாரெனினும், பின்னர் உணர்ந்து, அதை நீக்கி வேறொரு உயிலினை நம் அடிகளாரை (பழநியாண்டியை) நியமித்து எழுதிவைத்தார். தம் திருக் கரத்தாலேயே சந்நியாச தீட்சை செய்து வைத்தார். ஆசாரியாபிஷேகமும் செய்வித்து முறைப்படி உபதேசம் செய்து வைத்தார். பட்டமேற்போர் அக்காலை