பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13. தில்லைத் திருக்கோவில்

கூத்தன் ஆடும் அம்பலங்கள்

தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன் திருக்கோவில், இறைவன் திருக்கூத்து நிகழ்த்தும் ஐந்து சபைகளில் ஒன்றாகும். பொன் மன்றம், மணி மன்றம், வெள்ளி மன்றம், செப்பு மன்றம், சித்திர மன்றம் ஆகிய ஐந்தனுள் முதன்மை வாய்ந்த பொன் மன்றமாகிய கனகசபை, தில்லையில்தான் அமைந்துள்ளது.

பொன்மன்றின் உள்ளமைந்த சிற்றம்பலத்தில் கூத்தப்பெருமான் காட்சியளிக்கிறான். இச் சிற்றம் பலமும் இதன் முன்னமைந்த பேரம்பலமுமே திருக் கோவிலின் பழைய அமைப்புக்களாகும். இவை மரத்தால் அமைக்கப்பெற்றிருத்தலே பழமைக்குப் போதிய சான்றாகும். பல்லவர்கள் எழுப்பிய குகைக் கோவில், கற்கோவில்களுக்கு முந்தியன தில்லை யம்பலங்கள் என்பதை அறியலாம். அக் காலத்தில் இரண்டாம் சுற்றுவெளியில் உள்ள திருமூலட்டானேசுவரர் திருக்கோவிலும் சிறப்புற்றிருத்தல் வேண்டும்.

தில்லையிலுள்ள ஐந்து மன்றங்கள்

தில்லைக் கோவிலுள்ளேயே ஐந்து சபைகள் அமைந்துள்ளன. அவை சிற்றம்பலம், பேரம்பலமாகிய கனகசபை, தேவசபை, கிருத்தசபை, இராசசபை என்பனவாம். சிற்றம்பலத்தைச் சிற்சபையென்பர். இதுவே கூத்தப்பெருமான் சிவகாமசுந்தரியம்மையுடன் காட்சியளிக்கும் கருவறையாகும். இதன்