பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தமிழ் வளர்த்த நகரங்கள்

பால் அமைந்துள்ளது. இம் மண்டபம் குதிரைகள் பூட்டிய தேரின் அமைப்பைக் கொண்டதாகும். இது சித்திர வேலைப்பாடமைந்த ஐம்பத்தாறு தூண்களால் தாங்கப்பெற்றது. இதன்கண் ஊர்த்துவத் தாண்டவர் காண்டற்கினிய தோற்றத்துடன் விளங்குகிறார்.

இராசசபை

இராசசபை யென்பது ஆயிரக்கால் மண்டபமாகும். கூத்தப்பெருமான் ஆண்டில் இருமுறை ஆணித் திருமஞ்சன விழாவிலும் மார்கழித் திருவாதிரை விழாவிலும் இச் சபைக்கு எழுந்தருளுவான். தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணம் பாடியது இச் சபையிலிருந்து தான். இது தேவாசிரிய மண்டபம் என்றும் வழங்கும். இதில் வரிசைக்கு இருபத்து நான்கு தூண்களாக காற்பத்தொரு வரிசைகள் அமைந்துள்ளன. மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் அழகிய யானை வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் கீழ்வரிசைச் சுற்றுக்களில் கூத்தினர், இசையாளர் உருவங்கள் பெருவனப்புடன் அமைந்துள்ளன. கூத்தப்பெருமான் தில்லையில் உள்ள இவ்வைந்து சபைகளுக்கும் தலைவனதலின் அவனைச் சபாநாயகன், சபாநாதன், சபாபதி என்றெல்லாம் போற்றுவர்.

சிவகங்கைத் திருக்குளம்

ஆயிரக்கால் மண்டபமாகிய இராசசபைக்கு மேல்பால் மிகவும் தொன்மை வாய்ந்த தீர்த்தமாகிய சிவகங்கைக்குளம் அமைந்துள்ளது. இதில்தான் சிம்மவர்மனாகிய பல்லவ மன்னன் நீராடித் தனது வெம்மை நோய் விலகப்பெற்றான்; தனது மேனியும் பொன்