பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தமிழ் வளர்த்த நகரங்கள்


திருமுறை கண்ட சோழன்

அது கேட்ட இராசராசன் சமய குரவர் திருவுருவங்களைப் பல்லக்கில் வைத்து அலங்கரித்துக் கொண்டுவந்து நிறுத்தினான். உடனே அவர்கள் ஏடுகள் வைத்திருந்த அறைக்கதவைத் திறந்தனர். கறையான் புற்றுக்களால் மூடப்பட்டிருந்த அவ்வேடுகளை எடுத்துத் தூய்மை செய்து பாடல்களை வெளிப்படுத்தினான். நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டே அவற்றைத் திருமுறைகளாக வகுக்குமாறு செய்தான். அப்பாடல்களை நாடெங்கும் பரப்பினான். திருக்கோவில்களிலெல்லாம் பண்ணோடு ஒதுமாறு பண்ணினன். இச் செயலால் இராசராசன் ‘திருமுறை கண்ட சோழன்’ என்று பெருமையாகப் பேசப் பெற்றான். ஆகவே சைத்திருமுறைகள் பன்னிரண்டலுள்ளே முதல் எட்டுத் திருமுறைகள் தில்லையிலிருந்தே இடைக்கப் பெற்றன. அவற்றைக் காத்தளித்த பெருமை, தில்லைக்குரியதே.

தில்லையில் பெரியபுராணம்

பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் தில்லையிலேயே பாடப்பெற்றது. ஆசிரியராகிய சேக்கிழார் அதனைப் பாடுதற்குத் தில்லைக் கூத்தனே, ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தருளினான். தமிழகத்தின் ஐந்நூறு ஆண்டு வரலாற்றை அறிவதற்குக் கருவியாயுள்ள பெரிய புராணத்தைத் தந்த பெருமையும் தில்லைக்குரியதே. இந்நூல் சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற காவியங்களோடு ஒப்பாக வைத்து மதிக்கத்தக்க உயர்ந்த காவியமாகும்.