பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தன்னேரிலாத தமிழ்

5


‘‘செவ்விய மதுரஞ் சேர்ந்தநற் றமிழில்
    சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய
கவிஞர் அனைவரும் வடநூல்
   முனிவரும் புகழ்ந்தது‘‘

என்று பாடியுள்ளார். இங்கு எத்தனை அடைமொழிகளுடன் தமிழ் சிறப்பிக்கப்பெற்றுள்ளது! செம்மை, இனிமை, நன்மை ஆகிய மூன்று அடைமொழிகளால் தமிழைப் பாராட்டுகிறார் கம்பர்.

தமிழும் குமரகுருபரரும்

நெல்லை நாட்டின் தெய்வக் கவிஞராகிய குமரகுருபரர் தாம் பாடிய முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழில் நம் மொழியின் இனிமையைத் தித்திக்கப் பேசுந்திறம் தமிழர் சித்தத்தை இன்பவெள்ளத்தில் ஆழ்த்துவதாகும். முத்தமிழ்க் கடவுளாகிய முத்துக்குமரனின் செங்கனிவாயில் பசுந்தமிழின் நறுமணம் கமழ்கின்றதாம். அம்முருகவேளும் சங்கத்தில் புலவனாக வீற்றிருந்து தமிழை ஆய்ந்தான் என்பர். ஆதலின் அவன் சங்கப் புலவர்கள் வகுத்தமைத்த துங்கத் தமிழ் நூல்களைத் திருவாயால் ஓதிய அருளாளன் ஆவான். அவர்கள் வகுத்த தமிழ் நூல்கள் தீஞ்சுவைக் கனியும் தண்டேன் நறையும் வடித்தெடுத்த சாரம் அத்தகைய தமிழ் மணம், முருகன் திருவாயில் கமழ்ந் தூறுகின்றது என்று குமரகுருபரர் கூறியருளினார்.

                                                                 ‘’ முதற்சங்கத்
தலைப்பா வலர் தீஞ் சுவைக்கனியும்
        தண்டேன் நறையும் வடித்தெடுத்த
சாரங் கனிந்தூற் றிருந்தபசுங்
        தமிழும் நாற ‘‘

என்பது அவர் பாடற் பகுதியாகும்.