பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. தமிழ் வளர்த்த சங்கங்கள்

தமிழ்வளர்த்த நாடும் நகரும்

தொன்மையும் தூய்மையும் இனிமையும் வளமையும் ஆகிய கலங்களால் தன்னேரிலாது விளங்கும் தமிழைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்து வளர்த்த காவலர் பாண்டிய மன்னர்களாவர். தமிழகத்தையாண்ட முடிவேந்தர் மூவரும் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் பேணிவந்தனராயினும் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாகும். அதனால் பாண்டிய நாட்டைத் ‘தமிழ்ப் பாண்டி நாடு’ என்றும், அந்நாட்டின் தலைநகராகிய மதுரையினைத் தமிழ் மதுரையென்றும் புலவர்கள் போற்றுவர். “தண்ணர் தமிழளிக்கும் தண்பாண்டி நாடு” என்றே மாணிக்கவாசகர் பாண்டியநாட்டைப் பாராட்டினர். மணிமேகலை ஆசிரியர் “தென்தமிழ் மதுரை” யென்றே மதுரையைக் குறிப்பிட்டார். ‘தமிழ் கெழுகூடல்’ என்று புறநானூறு புகழ்கிறது.

சங்கம் பற்றிய சான்றுகள்

பாண்டிய மன்னர்கள் பைந்தமிழை வளர்த்தற்கென அமைத்த சங்கங்கள் மூன்று. அவை தலை, இடை, கடை யெனக் குறிக்கப்பெறும். இம்மூன்று சங்கங்களைப் பற்றிய வரலாற்றை இறையனார் களவியல் பாயிர உரையாலும், தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைக் குறிப்புக்களாலும், சில சங்க இலக்கிய உரைகளாலும் ஒருவாறு அறியலாம். இவற்றுள் இறையனார் களவியல் உரையே சங்க வரலாற்றைச்