பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தமிழ் வளர்த்த நகரங்கள்

சற்று விரிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வுரை பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பெற்றதே யெனினும் கருத்துக்கள் அனைத்தும் கடைச்சங்கத் தலைமைப் புலவராகிய நக்கீரனாருடையனவே என்பதில் ஐயமில்லை. இக்களவியல் உரை, சங்கம் இருந்த நகரங்களையும் அவற்றை நிறுவிய பாண்டியர்களையும், அவற்றில் இருந்து தமிழாய்ந்த புலவர்களையும், ஒவ்வொரு சங்கத்திற்கும் உரிய புலவர்களின் தொகையையும், சங்கம் நடைபெற்ற ஆண்டுகளின் அளவையும், முதலிரு சங்கங்கள் நிலவிய நகரங்கள் கடல்கோளால் அழிந்ததையும் எடுத்துரைக்கும் திறம் வரலாற்று முறைக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றது. அதனாலேயே இவ்வரலாற்றில் நம்பிக்கை கொண்ட பண்டை உரையாசிரியர்கள் பலரும் தத்தம் உரையகத்தே இவ் வரலாற்றுக் குறிப்புக்களை இடையிடையே எடுத்துக்காட்டினர்.

தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய பேராசிரியர், “தலைச் சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் இவ்விலக்கணத்தால் செய்யுள் செய்தார்”, “அவ்வழக்கு நூல் பற்றியல்லது மூன்றுவகைச் சங்கத்தாரும் செய்யுள் செய்திலர்” என்று கூறும் உரைகளுள் களவியல் உரையிற் காணும் சங்க வரலாற்றுக் குறிப்புக்களைக் காண்கிறோம்.

மற்றாேர் உரையாசிரியராகிய உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் தாம் வரைந்துள்ள தொல்காப்பிய உரைக்கண், “அவ்வாசிரியராவார், அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் தலைச்சங்கத்தாரும் முதலியோர்” என்றும், புறத்திணையியல் உரையில்,