பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ் வளர்த்த நகரங்கள்

இடை கடைச் சங்கங்கள்

கடைச்சங்கப் புலவருள் ஒருவராய மாங்குடி மருதனார் தாம் பாடிய மதுரைக் காஞ்சியில் முதலிடைச் சங்கங்களைப் பற்றிய செய்திகள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:

"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பில்
தொன்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந,”

"தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலங்தரு திருவின் நெடியோன் போல”

என வரும் மதுரைக்காஞ்சி அடிகளால் பாண்டியன் ஒருவன் அகத்தியரைத் தலைவராகக்கொண்டு முதற் சங்கத்தை நிறுவித் தானும் அச்சங்கத்தில் அகத்தியருக்கு அடுத்து வீற்றிருந்த செய்தியும், நிலந்தரு திருவின் நெடியோனாகிய முடத்திருமாறன் இடைச்சங்கம் நிறுவிப் புலவர்களைக் கூட்டித் தமிழாய்ந்த செய்தியும் விளக்கமாகின்றன.

இடைச்சங்கக் கபாடபுரம்

இடைச்சங்கம் இருந்த கபாடபுரத்தைப் பற்றிய செய்தி, வான்மீகி இராமாயணத்திலும் வியாச பாரதத்திலும் சுட்டப்பட்டுள்ளது. தென்பாற் செல்லும் வாணர வீரர்க்குச் சொல்லும் இராமன் வார்த்தைகளாக, ‘வானர வீரர்களே! பொன் மயமானதும் அழகானதும் முத்துக்களால் அணி செய்யப்பட்டதும் பாண்டியர்க்கு உரிய தகுதியுடையதுமான கபாடபுரத்தைக் காணக் கடவீர்!’ என்று வான்மீகியார் குறிப்பிட்டுள்ளார்.