பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழ் வளர்த்த நகரங்கள்

முன்னை நாளில் தென்னாட்டில் குடியேறிய ஆரியர் தம் வடநாட்டு வடமதுரையைப் பின்பற்றித் தமிழகத்திலும் இந்நகருக்கு மதுரையெனப் பெயர் வழங்கினர் என்று வரலாற்று ஆசிரியர் பேசுகின்றனர். மேலை நாட்டினர் மதுரையைத் ‘தென்னிந்தியாவின் ஏத்தன்ஸ்’ என்று ஏத்துகின்றனர்.

மதுரையும் மருதையும்

பாமர மக்கள் இன்றும் மதுரையை மருதையென வழங்கக் காண்கிறோம். அதுவே இந்நகரின் பழம் பெயராக இருக்கலாமோ என்று எண்ணுதற்கு இடமுமுண்டு. மருதமரங்கள் நிறைந்த நகரம் இதுவாதலின் அக்காரணம்பற்றி மருதையெனப் பெயர் பெற்றிருக்கலாம். வையையாற்றின் வளமான கரையில் அமைந்த இந்நகரின் மக்கள் இறங்கி நீரோடுந் துறையாக ‘மருதந் துறை’ என்ரறொரு நீர்த்துறை இருந்ததெனப் பரிபாடல் பகர்கின்றது. அது இத்துறையினை ‘திருமருத முன்துறை’ என்று குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரமும் ‘வருபுனல் வையை மருதோங்கு முன்துறை’ என்று இத்துறையைக் குறிப்பிடுகிறது. இவற்றால் மதுரையின் பழம்பெயர் மருதை என்று கொள்ள இடமுண்டு.

நான்மாடக்கூடல் மதுரை

இந்நகருக்குக் கூடல் என்றும், ஆலவாய் என்றும் வேறு பெயர்களும் வழங்குகின்றன. நான்மாடக் கூடல் என்ற பெயரே கூடல் என மருவியுள்ளது. திருக்கோவிலே மாடம் என்று சொல்லும் மரபுண்டு. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில் தலங்கள் சேர்ந்தமைந்த காரணத்தாலோ, கன்னி கோயில், கரிய