பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழ் வளர்த்த நகரங்கள்

பெருமானிடம் நகரின் எல்லையை வரையறுத்து உணர்த்துமாறு வேண்டினான். அப்பெருமான் தன் கரத்தமர்ந்த பாம்பை விடுத்து எல்லையை உணர்த்துமாறு பணித்தான். அது, தன்னால் எல்லை காட்டப்பெறும் நகரம் தன் பெயரால் தழைத்தோங்க அருள் புரியுமாறு பெருமானை வேண்டியது. பின்னர் அப்பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது; அவ்வாலைந் தனது வாயில் சேர்த்து எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல் மதுரை ‘ஆலவாய்’ என்னும் பெயர் பெற்றது என்பர் திருவிளையாடற் புராண ஆசிரியர். ஆலவாய் என்பது ஆலத்தை வாயிலுடைய பாம்பைக் குறிக்கும். வேறு சிலர், மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலநீழலில் அமர்ந்தவனாதலின் அந்நகர் ஆலவாயில் எனப்பட்டதென்பர்.

தெய்வங்கள் ஆண்ட திருநகரம்

இத்தகைய மதுரையைச் சிவபெருமான் சுந்தர பாண்டியனாகத் தோன்றி ஆண்டனன் என்றும், செவ்வேள் உக்கிரகுமார பாண்டியனாகத் தோன்றிச் செங்கோலோச்சினான் என்றும், மலையத்துவச பாண்டியனுக்கு உமையம்மை மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாகத் தனியரசு செலுத்தினாள் என்றும் புராணங்கள் புகலும்.

நாயன்மார் விளங்கிய நன்னகரம்

இந்நகரை முன்னாளில் ஆண்ட மன்னனாகிய அரிமர்த்தனன் என்பானுக்குச் சைவ சமயாசிரியர்களுள் ஒருவராகிய மாணிக்கவாசகர் மதியமைச்சராக விளங்கினார் என்று பல புராணங்கள் பகரும். மற்றாெரு சைவ சமய குரவராகிய திருஞானசம்பந்தர், கூன்