பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. இலக்கிய மதுரை

மாங்குடி மருதனார் காட்டும் மதுரை

தென்னகத்தின் தொன்னகரும் தமிழகத்தின் தலைநகருமாகிய மதுரையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்கப் புலவர்கள் முதல் இற்றை நாள் புலவர்கள் ஈறாகப் பலரும் புகழ்ந்து பாடியுள்ளனர். மதுரை மாநகரின் மாண்பினை விரிவாக எடுத்து விளக்கும் இலக்கியங்களும் பலவுள, அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன மதுரைக்காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம், திருவிளையாடற்புராணம் என்னும் நான்கு நூல்களுமாகும்.

கடைச்சங்கத் தொகை நூலாகிய பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார் என்னும் பெரும்புலவரால் பாடப்பெற்றது. அவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரசவையில் தலைமைப் புலவராகத் திகழ்ந்தவர். அவர் பாண்டியனால் பெரிதும் மதிக்கப்பெற்றவர்.

"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக”

என்று ஆப் பாண்டியனே மாங்குடி மருதனாரைப் பாராட்டுகின்றான். அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தும் நினைவோடு மருதனார் மதுரைக் காஞ்சியைப் பாடினார். இந்நூற்கண் அவர் காட்டிய புலமைத் திறங்கண்ட பிற புலவர்கள் அவரைக் ‘காஞ்சிப் புலவர்’ என்றே கொண்டாடினர்.

மாங்குடி மருதனார் காட்டும் மதுரைச் சிறப்பை நோக்குவோம். ஐவகை நிலவளங்களும் நிறைந்து