பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழ் வளர்த்த நகரங்கள்

விளங்கும் பாண்டிய நாட்டின் நடுவிடத்தே ம்துரைமாநகரம் அமைந்துள்ளது. வையையாற்றின் கரைக்கண் இருப்பது. ஆழமான அகழியையும், உயரமான மதிலையும், இடையறாமல் மக்கள் வந்து போகும் வாயிலையும், வரிசையாக அமைந்த பெரிய மனைகளையும் உடையது. ஆறு கிடந்தாற் போன்ற அகன்ற தெருக்களையுடையது. தெருக்களில் பலவகைக் கூட்டத்தாரின் ஒலிகள் எழுந்த வண்ணமாக இருக்கும். முரசறைவோர் விழாக்களைப்பற்றி விளம்பிக்கொண்டே செல்லுவர். கடலொலியைப் போலப் பல்வேறு இசைக்கருவிகள் எங்கும் முழங்கிக்கொண்டிருக்கும். அவ் இசையை விரும்பியவர்களுடைய ஆரவாரமும் நிறைந்திருக்கும்.

மதுரையில் பகற்கடைகளாகிய நாளங்காடியும், இரவுக் கடைகளாகிய அல்லங்காடியும் இருந்தன. கடைகளில் இன்ன பொருள் விற்கப்படுகின்றது என்பதை அறிவிக்கக் கொடிகள் கட்டப்பட்டிருக்கும். நாளங்காடியில் பூ விற்பாரும், மாலைகள் விற்பாரும், நறுமணச் சுண்ணம் விற்பாரும், வெற்றிலை பாக்கு விற்பாரும் இருப்பர். அல்லங்காடியில் சிலர் சங்கினை அறுத்து வளையல்களாகக் கடைந்து விற்பர். சிலர் அழகிய மணிகளுக்குத் துளையிடுவர். சிலர் பொன்னை உரைத்து மாற்றுக் காண்பர். சிலர் பொன்வேலை செய்வர். சிலர் ஆடைகள் விற்பர். சிலர் அழகிய ஓவியங்களை வரைந்து விற்பர். பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் ஆகிய கனிவகைகளைச் சிலர் விற்பர். வாழைக்காய், வழுதுணங்காய், பாகற்காய், கீரை, கிழங்கு முதலியவற்றைச் சிலர் விற்பர். இவர்கள் பேசும் ஓசையெல்லாம் கூடிப் பேரொலியாக இருக்கும்.