பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தமிழ் வளர்த்த நகரங்கள்

விளங்கும் சிறந்த நகரமாகவே மதுரை திகழ்ந்து வருகிறது. மதுரை போன்ற சிறந்த நகர் தமிழ் நாட்டில் ஒன்றுமின்று, சோழன் சேரன் ஆண்ட தலைநகரங்களும் இதற்கு ஒப்பாகா.

பரிபாடல் பாராட்டும் மதுரை

இனி, மற்றாெரு கடைச்சங்க நூலாகிய பரிபாடல் காட்டும் மதுரையைப் பார்ப்போம். எழுபது பாடல்களைக் கொண்ட பரிபாடல் நூலில் நான்கு பாடல்கள் மதுரையைப் பற்றியன என்று பழம்பாடல் ஒன்று பகர்கின்றது.

"திருமாற்(கு) இருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக், காடுகாட்(கு) ஒன்று,-மருவினிய
வையையிரு பத்தாறு, மாமதுரை நான்(கு) என்ப
செய்யபரி பாடல் திறம்.”

அந்நான்கு பாடல்களுள் ஒன்றேனும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் வையையைப் பற்றிய பாடல்கள் எட்டு நமக்குக் கிட்டியுள்ளன. அவற்றில் இடையிடையே மதுரையைப் பற்றிய குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.

மதுரைமாநகரின் நடுவில் திருக்கோவில் அமைந்துள்ளது. அதன் காற்புறமும் தெருக்களின் பின் தெருக்களாக அமைந்துள்ளன. இவ்வமைப்புத் தாமரைப்பூவின் அமைப்பை ஒத்திருந்தது. தாமரை மலரின் நடுவில் உள்ள பொகுட்டினைப் போன்று இறைவன் திருக்கோவில் இலங்கியது. பொகுட்டினைச் சுற்றியிருக்கும் இதழ்களைப் போன்று தெருக்கள் திகழ்ந்தன. இத்தகைய நகரின் அமைப்பு முறையைப் பரிபாடல் நன்கு சித்திரிக்கின்றது.