பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழ் வளர்த்த நகரங்கள்

களிறு துதிக்கையைத் தூக்கி நீரைப் பொழிவது போன்றிருக்கும். மதிலின் புறத்தே வையைக் கரையிலுள்ள மலர்ச்சோலைகளின் நடுவே பாணரும் கூத்தரும் வாழ்தற்கென்று பாக்கங்களும் சேரிகளும் விளங்கின.

திருமகளுக்கு அணிந்த திலகம் போல உலகில் புகழ் பூத்துக் கமழ்வது மதுரைமாநகரம். பரங்குன்றும் வையையும் பாரில் உள்ளளவும் மதுரை சீர்குன்றாது பேர்பெற்று விளங்கும். ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்துவக்கும் மக்கள் மதுரையில் மிக்குள்ளனர். அவர்களே வாழ்வார் என்று சொல்லத்தக்கார். அவர்கள் புத்தேள் உலகும் போதற்கு உரியராவர்.

இத்தகைய மதுரைமாநகரைப் புலவர்கள் தங்கள் புலமைத் துலாக்கோலால் தூக்கிப் பெருமையை நோக்கினர். உலகினை ஒரு தட்டினும் மதுரையை மற்றாெரு தட்டினும் வைத்து எடைபார்த்தனர். உலகனைத்தும் வாட, மதுரையிருந்த தட்டு வாடவில்லை. எனவே, உலக முழுதும் சேர்ந்தாலும் மதுரைக்கு ஒப்பாகாது என்று மதிப்பிட்டார் பரிபாடற் புலவர்.

"உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப்
புலவர் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும்
தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக் கூடல் நகர் ’’

என்பது பரிபாடல்.

மதுரைமக்கள் நீராடும் வையைத்துறை

மதுரைமாநகரிலுள்ள மக்கள் வையையில் நீராடுதற்குரிய நெடுந்துறையாகவும் முன்துறையாகவும்