பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய மதுரை


விரும்பிய பாண்டியன் கடைத்தெருக்கள், அம்பலங்கள், காற்சந்திகள், மன்றங்கள், செய்குன்றுகள், மடங்கள், நாடக அரங்குகள், அந்தணர் தெருக்கள், அரசர் தெருக்கள், வணிகர் தெருக்கள், வேளாளர் தெருக்கள், யானைக் கூடங்கள், தேர்ச்சாலைகள், குதிரை இலாயங்கள், கல்விக்கூடங்கள், குளங்கள், கிணறுகள், கந்தவனங்கள், பூங்காக்கள், உய்யான வனங்கள் முதலியவற்றை அழகுற அமைத்தான்.

இவ்விதம் அமைத்த புதிய நகரின் வடகீழ்த் திசையில் மன்னன் மாளிகை விளங்கியது. மன்னன் புதிய நகருக்குச் சாந்தி செய்ய எண்ணினன். அப்போது இறைவன் தன் சடையிலிருந்த பிறைமதியின் புத்தமுதை நகர் முழுதும் சிந்துமாறு அருள்புரிந்தான். அது நகரை அமுத மயமாக்கியது. மதுரமான அமுதத்தால் தூய்மை செய்யப்பெற்ற நகரம் மதுரையெனப் பெயர்பெற்றது. இவ்வாறு பரஞ்சோதி முனிவர் மதுரைமாககர் தோன்றிய வரலாற்றைத் தம் புராண நூலில் புகன்றுள்ளார்.