பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தமிழ் வளர்த்த நகரங்கள்


வரும் ஒவ்வொரு பாடலை எழுதிவைத்திருப்பதைக் கண்டு எடுத்து நோக்கினான். அவை ஒன்றோடொன்று தொடர்பில்லாதனவாய் இருத்தலைக் கண்டான். அவற்றையெல்லாம் எடுத்து வையையாற்று வெள்ளத்தில் வீசுமாறு பணித்தான். அங்ஙனமே ஏவலாளர் செய்தனர். ஆற்றில் எறிந்த ஏடுகளில் நானூறு ஏடுகள் மட்டும் வெள்ளத்தை எதிர்த்துக் கரை சேர்ந்தன. அவற்றை ஏவலாளர் ஒருங்குசேர்த்துப் பாண்டியனிடம் கொண்டுவந்து கொடுத்தனர். அவற்றை நோக்கிய போது அவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டன வாய்த் தோன்றின. உடனே பதுமனார் என்னும் பைந்தமிழ்ப் புலவரைக் கொண்டு அந் நானூறு பாடல்களையும் வகைப்படுத்துத் தொகுத்தான். அதுவே நாலடி நானுறு என்றும் நாலடியார் என்றும் பெயர் பெற்றது. இந் நிகழ்ச்சி உக்கிரப்பெருவழுதியின் காலத்தே நிகழ்ந்தது என்று உரைப்பாரும் உளர். இதனை விளக்கும் பழைய பாடல் ஒன்று உள்ளது.

“மன்னன் வழுதியர்கோன் வையைப்பேர் ஆற்றின்
எண்ணி யிருநான்கோ டாயிரவர்-உன்னி
எழுதியிடும் எட்டில் எதிரே நடந்த
பழுதிலா காலடியைப் பார்.”

நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகச் சேர்க்கப்படினும் அது பிற்காலத்து எழுந்ததே. அது திருக்குறளுக்கு ஒப்பாக வைத்து மதிக்கப்பெறும் நீதிநூலாகும். அதனாலேயே திருக்குறளையும் நாலடியாரையும் சேர்த்துப் பாராட்டும் பழமொழிகள் எழலாயின. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி,’ ‘பழகுதமிழ்ச் சொல் லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழிகள் அவ்