பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழ் வளர்த்த நகரங்கள்

யாழ்வல்ல தொண்டரின் வறுமையைப் போக்கப் பெருமான் திருவுளங் கொண்டான். அந்நாளில் சேர நாட்டை யாண்ட சிவபத்தனாகி ய சேரமான் பெருமாள் என்னும் மன்னர்பெருமானுக்குத் திருமுகம் கொடுத் தனுப்பினன். ஒலேயைத் திருமுகம் என்றுரைத்தல் மரபு. அத் திருமுகத்தில் எழுதப்பெற்ற பாடல் திருமுகப்பாசுரம் எனப்படும். இதனைப் பிற்காலத் தவர் சீட்டுக்கவி என்பர். இது சைவத் திருமுறை களுள் ஒன்றாகிய பதினேராம் திருமுறையில் முதற் பாடலாக விளங்குகிறது.

பொருள் இலக்கணம் வல்ல புலவரைக் காணுேமே என்று கலங்கிய பாண்டியனது கலக்கத்தை யகற்றக் களவியல் இலக்கணத்தை மூன்று செப்பிதழகத்து எழுதிக்கொடுத்தான் ஆலவாய்க் கடவுள். அதுவே இறையனர் களவியல் என வழங்குவது.

குமரகுருபரர் வளர்த்த தமிழ்

முந்நூறு ஆண்டுகட்கு முன்னர்த் தென்பாண்டி நாட்டிலுள்ள திருவைகுண்டம் என்னும் பதியில் தோன்றியருளிய அருட் கவிஞராகிய குமரகுருபரர், மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சிபுரிந்த காலத்தில் இக் நகருக்கு எழுந்தருளினார். அவர் மதுரையின் தென்பால் அமைந்த திருப்பரங்குன்றில் எழுந்தருளிய செவ்வேளைப் பணிந்து ஆங்கிருக்கும்போது மதுரை மீனாட்சியம்மைமீது பிள்ளைத் தமிழ் நூலொன்று பாடினர். அதனை உணர்ந்த, மீனாட்சியம்மை, நாயக்க மன்னர் கனவில் தோன்றிக் குமரகுருபரரை அழைத்து வந்து பிள்ளைத்தமிழைத் தம் சந்நிதியில் அரங்கேற்று மாறு பணித்தருளினார்.