பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழ் வளர்த்த நகரங்கள்


சமஸ்தானத்தின் வழியாக என்றும் பெரும்பொருள் கிடைக்குமாறு உதவினர். பாண்டித்துரைத் தேவர், மதுரை வடக்கு வெளி வீதியிலிருந்த தம் மாளிகையைத் தமிழ்ச்சங்கத்திற்கு உவந்தளித்தார். இச் சங்கத்தின் அங்கங்களாகச் செந்தமிழ்க் கல்லூரி, பாண்டியன் புத்தகசாலை, நூலாராய்ச்சிச்சாலை, சங்கப் பதிப்பகம் முதலியவைகளும் அமைக்கப்பெற்றன. கல்லூரியின் தலைமையாசிரியராக வடமொழி தென்மொழிப் புலமை சான்ற திரு. நாராயண ஐயங்கார் நியமிக்கப்பெற்றார். ரா. இராகவையங்கார் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக நியமனம் பெற்றார். இவரை ஆசிரியராகக் கொண்ட செந்தமிழ் என்னும் திங்களிதழ் தொடங் கப்பெற்றது. சுப்பிரமணியக் கவிராயர், அருணசலக் கவிராயர், கந்தசாமிக் கவிராயர் ஆகியோர் நூற்பதிப் பாளர்களாக அமைந்தனர். அரசஞ் சண்முகனர் போன்ற சிறந்த தமிழ்ப்புலவர்கள் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.

கல்லூரியில் பயிலும் மாணவர்க்கு உண்டியும் உறையுளும் வழங்கப்பெற்றன. கல்லூரித் தேர்வுகள் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்று மூன்றாகப் பகுக்கப்பெற்றுப் பாடத்திட்டங்களும் வகுக்கப்பெற்றன. இத் தேர்வுகளில் முதன்மை யாகத் தேர்ச்சி பெறுவார்க்குப் பொற்பதக்கம், பொற் கடகம், பொற்காசுகள் போன்ற பரிசுகள் புதுக் கோட்டை மன்னரால் வழங்கப்பெற்றன. சங்கத்தின் வளர்ச்சிக்குக் குறுநிலமன்னர்களும் பெருநிலக்கிழார்களும் வணிகப் பெருஞ்செல்வர்களும் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பொருளுதவியை விருப்புடன் கொடுத்து வந்தனர்.