பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழ் வளர்த்த நகரங்கள்


கல்லில் திரும்பவும் இடறிக் குடத்தைக் கீழே போட்டான். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதைக் கண்ட ஆயன் உள்ளம் உடைக் தான். தன் செலவுக்குத் தடையாக இருக்கும் அக் கல்லை உடைத்துத் தோண்டி எடுத்தெறிந்துவிட வேண்டும் என்று முடிவு கட்டினான். ஒருநாள் இருப்புக் கருவியுடன் புறப்பட்டான். அக்கல்லை உடைப்பதற்காக ஓங்கி அதன் தலையில் வெட்டினன். கல்லில் வெட்டுண்ட இடத்திலிருந்து இரத்தம் பீறிட்டெழுந்தது. அதைக் கண்டு அச்சமும் வியப்பும் கொண்டான். இச் செய்தியினை மணப்படை மன்னனிடம் சென்று அறிவித்தான்.

இலிங்கம் காண்டல்

ஆயன் கூறிய செய்தியைக் கேட்ட வேந்தன் வேணுவனத்துள் சென்று அக் காட்சியைக் கண்டான். சுற்றிலும் நிலத்தை அகழ்ந்து நோக்கினன். அக் கல் சிவலிங்கமாகக் காட்சியளித்தது. அவ் இடத்திலேயே அரசனும் ஆயனும் சிவபிரான் திருக்கோலத்தைத் தரிசித்தனர். அதனால் அரசன் ‘முழுதுங் கண்ட ராம பாண்டியன்’ எனப் பெயர் பெற்றான் , அவ் ஆயன் ‘முழுதுங் கண்ட ராமக்கோன்’ என்று பாராட்டப் பெற்றான். அன்றிரவே பாண்டியன் கனவில் வேய் முத்தர் தோன்றினர். காட்டை யழித்துக் கடிநகர் அமைக்குமாறு கட்டளையிட்டருளினர். சிவலிங்கம் இருந்தவிடத்தில் திருக்கோவில் எழுப்புமாறு பணித்தார். அவ்வாறே முழுதுங்கண்ட ராம பாண்டியன் மூங்கிற்காட்டை யழித்துப் பாங்கான நெல்லைப் பதியை உருவாக்கினன். சிவலிங்கம் விளங்கிய இடத்தில் திருக்கோவிலையும் கட்டினான்.