பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழ் வளர்த்த நகரங்கள்


ஒருவன் இருந்தான். அவன் வேதசன்மா என்னும் பெயருடையான். அவன் ஒருநாள் வேய்முத்தருக்குத் திருவமுது படைத்தற்குரிய நெல்லைக், கோவிலின் அருகில் உலரப் போட்டுவிட்டுப் பொருநையாற்றுக்கு நீராடச் சென்றான். அவன் ஆற்றில் நீராடிக்கொண்டிருக்கும்போது கறுத்த மேகங்கள் இடியிடித்துப் பெருத்த மழை பெய்யத் தொடங்கின. உலரவிட்ட நெல்லை மழைநீர் கொண்டுபோய்விடுமே என்று வேதசன்மா கெஞ்சம் வெதும்பிக் கோவிலுக்கு விரைந்தோடி வந்தான். நிலத்தில் விரித்துச் சென்ற நெல்லைப் பார்த்தான். நெல்லின் மீது ஒருதுளி நீரும் விழவில்லை. அதைச் சுற்றிலும் வேலியிட்டது போன்று மழை பெய்து கொண்டிருந்தது. வேய்முத்தரின் திருவருளைச் சிந்தித்து வியந்தான். நெல்லுக்கு வேலியிட்டுக் காத்தருளிய வேய்முத்தரை நெல்வேலி நாதன் என்று போற்றிப் புகழ்ந்தான். அதனால் இத்தலம் திருநெல்வேலி என்று பெயர்பெற்றது.

திருநெல்வேலி தென்காஞ்சி

திருநெல்வேலித் திருக்கோவிலில் பாண்டியர், சோழர் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. அவை கி. பி. 10ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை தென்னகத்தை யாண்ட மன்னர்களால் எழுதப் பெற்றவை. அக் கல்வெட்டுக்களில் திருநெல்வேலி அமர்ந்த இறைவன் பெயர் திருநெல்வேலி உடையார், திருநெல்வேலி உடைய நாயனர் என்றும், அம்மன் பெயர் திருக்காமக்கோட்ட முடைய காய்ச்சியார் என்றும் குறிக்கப்பெற்றுள்ளன. இப் பெயர்கள் எழுந்தமைக்குக் காரணம் கூறுவது போலப் புராணம் ஒரு கதை புகல்கிறது.