பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தமிழ் வளர்த்த நகரங்கள்


இதனைக் கண்ணுற்ற குமரகுருபரர் நெல்லமா நகரை யடைந்து சிந்துபூந்துறைத் திருமடத்தில் தங்கினர். அங்கிருந்துகொண்டே நெல்லமாநகரின் தெற்குத் தேர் வீதியிலும் வடக்குத் தேர் வீதியிலும் முறையே இரு மடங்களை நிறுவினார். அவை மெய் கண்டார் மடம், சேக்கிழார் மடம் என்று பெயர்பெற்றன. மெய்கண்டார் மடத்தில் சைவ சமயச் சாத்திர நூல்களாகிய மெய்கண்ட நூல்களின் உண்மைகள் தக்க அறிஞரைக்கொண்டு விளக்கப்பெற்றன. சேக்கிழார் மடத்தில் பெரிய புராணத்தில் பேசப்பெறும் சிவனடியார்களின் அரிய வரலாறுகள் விரிவுரை செய்யப் பெற்றன. நெல்லமாககர மக்கள் அனைவரும் திரண்டு சென்று சமயத் தமிழ் விரிவுரைகளைக் கேட்டுச் சைவ சமயத்தில் மிகுந்த பற்றுப் பூண்டொழுகினர்.

அழகிய சொக்கநாதரும் நெல்லையப்பரும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நெல்லைமாநகரில் சிறந்து விளங்கிய பெரும்புலவர்கள் இருவர். அவர்கள் அழகிய சொக்கநாதரும், நெல்லையப்பக் கவிராயரும் ஆவர். இவர்களை ஆதரித்த வள்ளல்கள் தளவாய் இராமசாமி முதலியாரும் இராசை முத்துசாமி வள்ளலுமாவர். நெல்லையப்பக் கவிராயர் திருநெல்வேலித் தல புராணம் பாடிய தமிழ்ப்புலவர். அழகிய சொக்கநாதர் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், காந்திமதியம்மை பதிகம், காந்திமதியம்மை கலித்துறை யந்தாதி, நெல்லை நாயகமாலை, முத்துசாமிபிள்ளை காதல் பிரபந்தம், சங்கராயினர் கோயில் கோமதியந்தாதி, வில்லிபுத்துார் கோதையந்தாதி முதலிய பல சிறந்த கால்களைப் பாடியவர்.