பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தில்லையின் சிறப்பு

89


மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும், திருமூலர் திருமந்திரத்திலும் இத் தலத்தின் பெருமை பேசப் படுகிறது.

வடமொழியில் உள்ள சாந்தோக்யம், கைவல்யம் என்னும் உபநிடதங்களும், சிவரகசிய குதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், ஏமசபா மான்மியம் முதலியனவும் இத் தலச் சிறப்பை விளக்குவனவே.

தில்லைத் திருச்சிற்றம்பலம்

தில்லையில் கூத்தப்பெருமான் குலவும் திருக் கோயிலை ‘அம்பலம்’ என்றும், ‘சிற்றம்பலம்’ என்றும் கற்றுணர்ந்தோர் போற்றுவர். ‘திருச்சிற்றம்பலம்’ என்பது சிவனடியார்க்கு ஒரு சிறந்த மந்திரம். அவர்கள் தேவார திருவாசகத் திருமுறைகளே ஒதத் தொடங்கும் பொழுதும், ஒதி முடிக்கும் பொழுதும் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற மறைமொழியை மனமார கினைத்து, நாவார நவிலும் முறை, இன்றும் தமிழகத்தில் உண்டு. இம் மறைமொழி ஓங்காரத்தின், உள்ளுறையாகிய அறிவாற்றலாகிய அருட்பெருவெளியினைக் குறிக்கும். ‘தில்லைச் சிற்றம்பலத்தில் எழுங்தருளிய செல்வனாகிய கூத்தப்பெருமான் குரைகழலை ஏத்தும் செல்வமே செல்வம்’ என்று சிங்தை குளிர்ந்து செந்தழிழ்ப் பாவிசைத்தார் திருஞானசம்பந்தர்.

“செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலம்மேய
செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே”

என்பது அவர் அருளிய தேவாரமர்கும்.