பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்ந்த கதை

17

வசனம்

நினைப்பவர் மனத்திற்கு இனியதாய், கேட்பவர் செவிக்கு இனியதாய், சொல்லுவார் வாய்க்கு இனியதாய்ப் பிறவிப் பிணிக்கே அரிய மருந்தாகத் திகழ்வது நம் திருக்குறள். ஒரு காலத்திலே திருமால்—வாமனனாக வந்த அந்தப் பெருமாள் வானமும் பூமியும் ஒரே வடிவாக வளர்ந்தான். தனது இரண்டு அடியினாலே உலகத்தை யெல்லாம் தாவியளந்தான். அதேபோல, நம் திருவள்ஞவர் பெருமானும், தமது குறள் வெண்பாவின் இரண்டு அடியினாலே—இல்லேயில்லை ! ஒன்றேமுக்கால் அடியினாலே இவ்வுலகத்திலுள்ள மக்கள் எல்லோருடைய உள்ளத்தையும் அளந்து கூறினார்.

இத்தகைய திருக்குறள் ஓதற்கு இனியது; எளியது. ஆனால் உணர்வதற்கு அரியது. கள்ளமில்லாத உள்ளத்தவர்கள் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் நெஞ்சத்தை உருக்க வல்லது. இத்தகைய நூலைத் தந்த வள்ளுவர், தமிழர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உறையவேண்டும். வள்ளுவரைப் படியாத எவனும் தமிழ்நாட்டு அரசியலில் பதவிபெறக்கூடாது. வள்ளுவருக்கு விழா, உலகநாடுகள் அத்தனையும் கொண்டாடுமாறு செய்யவேண்டும். தமிழ்நாட்டில் பிறந்த எந்த மகனும் எந்த மகளும், தன் சொந்த வேதம் திருக்குறளே ! என்பதை உணர்ந்து,

பாடல்

ஆயிரத்து முந்நுாற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததன்பின்—போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ ! மன்னு தமிழ்ப்புலவர்
ஆய்க்கேட்க வீற்றிருக்க லாம்.