24
இதைக் கண்டும், தம்பி! நம்மீது உள்ள கோபத்தைக் காரணமாகக் கொண்டு, காமராஜரை ஆதரித்து, அதன் தொடர்பாகக் காங்கிரசை ஆதரித்து, மீண்டும் காங்கிரசாட்சி ஏற்படுத்தி விட்டால், ஏற்பட உடந்தையாக இருந்தால், நாட்டு நிலைமை எப்படி ஆகும்? தம்பி! நான் கூறினால், பொறி பறக்காது; முன்பு பெரியார் சொன்னதை ‘இரவலாக’க் கொண்டு உனக்கும், உன் மூலம், நாட்டுக்கும் தருகிறேன்.
அப்படிப்பட்ட ‘மிருக ஆட்சி’ ஏற்படக்கூடாது எச்சரிக்கையாக இருங்கள், காங்கிரஸ் கட்சியைப் பாசீச ஸ்தாபனமாக்கி விடாதீர்கள் என்று மக்களிடம் இந்தத் தேர்தலின்போது எடுத்துக் கூறுவோம், தம்பி. நம்மாலே, காங்கிரசின் கேடுபாடு குறித்தும், காமராசரின் திருக்கலியாணகுணம்பற்றியும், ஆணித்திறமாக எடுத்துக்கூற முடியாதபோது, காமராஜர் குறித்தும், காங்கிரஸ் பற்றியும், ‘விடுதலை’ நாட்டுக்குத்தந்துள்ள விளக்க உரைகளைத் தொகுத்து அளித்தாலே போதும், சூடும் சுவையும் நிரம்ப உண்டு.
குரங்குகைப் பூமாலைபோல, காங்கிரசு சர்க்கார் வரிப்பணம்போல.
யானை உண்ட முலாம் பழம்போல! காங்கிரசு நிதிக்குக் கொடுத்த பணம்போல!
பெருச்சாளி புகுந்த வீடுபோல! காங்கிரஸ் சர்க்கார் ஆண்ட நாடுபோல!
இப்படிப்பட்ட அரசியல் பழமொழிகள்—படப்பிடிப்புகள்—கண்டனங்கள்—விளக்கங்கள்—ஏராளம்—ஏராளம்!!
பேரகராதி நமக்குப் பெருந்துணை புரியும்!!
2–9–1956
அன்பன்,
அண்ணாதுரை