உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

அரசியல் உலகத்து அதிபர்கள், ஆழ்வார்கள், அடிவருடிகள் எனும் எவரும் சர்வஜாக்ரதையாக இருக்கவேண்டும், ஏனெனில், ரோம் சீரழிந்ததே, கோலமயிலனையார் கண்டரரைக் கொல்லும் விழியால் தாக்கியதனால்தான் என்று எடுத்துக் கூறவே எழுதப்பட்டது அந்த ஏடு.

இது, சபலம் எழும்போதெல்லாம், அமைச்சர்போன்று பெரிய நிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் படித்துப் பாடம் பெற்று, பதமும் பக்குவமும் கெடாதபடி தம்மையும் நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்டது.

படித்துவிட்டு, பாடம் பெறாமல், பெருமூச்சு விடுவதும், ஆஹா! அந்தக் காலம், எப்படிப்பட்ட அருமையான காலம்! என்று ஏங்குவதும், இது அதுபோலவா? கண்டால் புன்னகை மலருகிறது, கைபட்டால் முகம் சுளித்துக்கொளவதும் தெரிகிறது. தொட்டால் துவளும் போக்கு அல்லபோலும், கனியவைத்திடக் காலம் அதிகம் தேவைபோலும் என்றெல்லாம் எண்ணமிடுவதும் சிலருக்கு ஏற்படுகிறது எனின் குற்றம் என்னுடையதல்ல. கிடைத்த பாலை குழந்தைக்குத் தந்து மகிழ்ந்திடும் மதியூகியும் உண்டு, பாம்புப் புற்றுக்கு வார்த்து விட்டு பரமபதத்துப் பேரேட்டிலே பெயர் பதிவாகிவிட்டது என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளியும் உண்டு! குற்றம், பாலில் இல்லை!!

அமைச்சர் இப்போது காங்கிரஸ் வட்டாரத்திலே இடறிவிழுந்தால், ஓர் இரவு எனும் ஏட்டிலே நான் காட்டி இருக்கும் ஜெகவீரர் மீது தான் விழ வேண்டும். அத்தகையோரின் கெடுமதியைக் கண்டிக்க ஏடு எழுதுவது, எந்த வகையான குற்றமோ-எனக்குத் தெரியவில்லை—காலஞ்சென்ற ‘கல்கி’யும் வ.ரா.வும் அவ்விதம் கூறவில்லை! அவர்கள் ஏதேனும் குறை காட்டியிருந்தால், நான் திருத்திக் கொண்டிருப்பேன். அமைச்சர் போன்றவர்கள் அந்த ஏடுகள் குறித்து ஏதேதோ பேசும்போது, எனக்கு அவர்கள் அந்த ஏடுகளிலிருந்து பெறவேண்டிய பாடத்தைப் பெறவில்லை என்றுதான் தெரிகிறது. அவர்களை எல்லாம் திருத்தும் ஆற்றலையா நான் பெற்றிருக்கிறேன்! நாட்டு மக்கள்தான் அவர்களைத் திருத்தவேண்டும். சீதையை இராவணன் சிறை பிடித்ததைக் கூறிடும் சம்பவத்தைக் கவி கூறுவது எதற்கு? அதுபோல ஒன்று கிடைக்காதா, இராவணன்போல கெஞ்சிக் கிடக்காமல், வஞ்சியைப் பஞ்சணை விருந்தாக்கிக் கொள்ளலாமே என்ற கெடுமதி பெறுவதற்கா?