உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ஒர் இரவு,—ரோமாபுரி ராணிகள்—மேலிடத்தில் உள்ளவர்கள் ஒழுக்கத்தைத் துணைகொண்டால்தான், நாடு உருப்படும் என்ற உண்மையை உணர்த்தும் ஏடுகள்!

துரோபதை துகில் உரியப்படும் சம்பவத்தைப் படிக்கக்கேட்டு, பரிதாபப் படவேண்டும், அக்ரமம் இந்த அளவுக்கா போவது என்று கொதித்தெழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறை - துகிலா உரிந்தார்கள்...ஆஹா...பலே! பலே!...சொல்லு சொல்லு...எப்படி எப்படி உரிந்தார்கள்...என்று ரசித்துக் கேட்டபடி, எதை எதையோ எண்ணிக்கொண்டு, உதட்டை மடக்கிக் கடித்துக்கொள்ளும் உலுத்தர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! அதற்கென்ன செய்யலாம்.

கிடக்கட்டும், நான் வகை கெட்டவன், ஓர் இரவும், ரோமாபுரி ராணியும் குறித்து மட்டுமே எழுதினேன்; இதனை ஏளனம் செய்து எரிச்சல்பட்டுப் பேசுகிறாரே, இவர் தீட்டி, நாட்டவருக்குத் தந்துள்ள கேடு நீக்கிடும் ஏடுகள், யாவை?

இவர் தீட்டிய ஓர் அரசியல் விளக்க ஏடு வெளிவந்தபிறகுதான், உலகப் பெரும் தலைவர்கள் ஒன்று கூடி, உண்மையை உணர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையையே அமைத்ததுபோலவும், இவர் அளித்த விஞ்ஞான விளக்க ஏட்டினைப் படித்த பிறகே ஈன்ஸ்டின் தத்துவத்தையே உலகு பெற்றதுபோலவும், இவர் கீதைக்குப் புது வியாக்யானம் தீட்டிடக் கண்டு, கண்ணனே ஆச்சாரியார் கனவில் தோன்றி, கண்ணன் காட்டிய வழி என்று நீர் வெளியிட்ட ஏடு சரியில்லை, நமது பக்தன் பண்டித சிகாமணி சுப்ரமணியம் தீட்டியுள்ள ஏடுதான் சரியானதாகும் என்று எடுத்துரைத்தது போலவும், ‘உலகப் பேருண்மைகள்’ என்று இவர் ஓர் ஏடு தீட்டிட, அதிலே உள்ள கருத்துரையைக்காணவே, நேரு பண்டிதர் ரஷியாவுக்கும் கிரீசுக்கும், சவுதி அரேபியாவுக்கும், பிரான்சுக்கும் இப்படித் தேசம் தேசமாகச் சுற்றி அலைந்து தேடிக்கொண்டிருப்பது போலவும், நோபல் பரிசு வருஷா வருஷம் எனக்கே தருகிறீர்களே, மற்றவர்களும் பிழைத்துப் போகட்டும் பாவம் என்று இவராகப் பார்த்து நிறுத்திக்கொண்டது போலவும், பேசுகிறாரே, தம்பி, இவர் தீட்டி நாட்டுக்கு நீட்டிய ஏடு எத்தனை?

இன்றுவரையில், சொத்தையோ சோடையோ இவர் பார்க்க, படிக்க, கண்டிக்க, வெறுக்க, நான், ஏடு தந்ததாகத் தெரிகிறதே தவிர, நான் படித்திட இவர் ஒரு ஏடும் தந்ததாகத் தெரியவில்லையே! இந்த மலடியா என் படைப்பு-