உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

இப்போதாவது, முன்னாலே வஞ்சகம் செய்யப்பட்டதற்குப் பரிகாரம் தேடும் முறையிலும் இப்போதைக்கு நீதி வழங்கும் தன்மையிலும், தென்னாடடுக்கு 2000-கோடி ரூபாய் ஒதுக்குவதாக, நேருபண்டிதரை வாக்களிக்கச் சொல்லுங்கள்; அந்த வாக்குறுதி கிடைத்தால், நாட்டுக்கு 2000 கோடியும் அதன் பயனாகப் பல நற்பயனும் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடனும், நாம் முயற்சி எடுத்ததால், இந்தப்பலன் நாட்டுக்குக் கிடைக்கிறது என்ற திருப்தியுடனும், நாங்கள் தேர்தலில் நிற்பதைக்கூட விட்டுவிடுகிறோம், என்றேன்.”

இது சில நாட்கள், கவனிப்பாரற்றதாக இருந்துவந்தது.

நாட்டுமக்கள், இதனைக் கவனிக்கும்படியான அரிய தொண்டாற்ற முதலில் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபட்டது; நான் சொன்ன யோசனையை ஆதரிப்பதன் மூலமாக அல்ல; நையாண்டி செய்வதன் மூலமாக.

திராவிடநாடு கூட வேண்டாம் போலிருக்கிறது, 2000-கோடி ரூபாய் கொடுத்தால் போதுமாம்—அண்ணாத்துரையின் அரசியலைப் பார்த்தீர்களா—2000-கோடி கிடைத்துவிட்டால், தேர்தலில் கூட ஈடுபடாமல் விலகிக்கொள்வர்களாம்—இப்படி இருக்கிறது ‘இதுகளோட’ அரசியல்—என்று கம்யூனிஸ்டுகள் கேலிபேசினர்.

இது மக்களிடம் நமக்கு இருந்த ‘மதிப்பை’ உயர்த்தியதை, அவர்கள் அறியவில்லை.

இதுவா அரசியல்? என்று கம்யூனிஸ்டுகள் கேட்டுக் கேலி செய்ததிலிருந்தே, மக்களுக்கு ஒன்று புரிந்தது; மற்ற மற்ற கட்சிகளைப்போல அல்லாமல், முன்னேற்றக் கழகத்தார், நாட்டுக்கு நன்மை கிடைப்பதானால் நாங்கள் தேர்தலைக்கூட மறந்துவிடுகிறோம் என்றல்லவா தெரிவிக்கிறார்கள். தேர்தலில் ஈடுபட்டுத் தமது கட்சிக்குப் புதிய அந்தஸ்து தேடிக்கொள்வதுதான் குறிக்கோள் என்று இல்லாமல், நாட்டுக்கு 2000-கோடி ரூபாய் ஒதுக்கினால், தேர்தல் வாய்ப்பும் வேண்டாம் என்றல்லவா கூறுகிறர்கள்—கட்சியைவிட, நாடு பெரிது என்று கருதும் இவர்களல்லவா, உண்மை ஊழியர்கள், என்று மகிழ்நதனர்.

இப்போது, கம்யூனிஸ்டுகள் செய்த ‘தொண்டு’ மேலும் திருத்தமாக, சுப்ரமணியனார்மூலம், செய்யப்படடிருக்கிறது.

இவர், கம்யூனைஸ்டுகளைவிட பலபடி தாவிச் சென்று ‘ஆக்ரோஷத்துடன்’ பேசியிருக்கிறார் என்பது எல்லா ஏடுகளாலும் தெரிகிறது.