80
வெட்டினராம், குத்தினராம், பயங்கரமான ஆயுதங்களால், வெறியர்கள்; தனியாக நின்றான்; அவன் கூப்பிடு குரலுக்கு ஓடிவர இலட்சக் கணக்கான மக்கள் உள்ளனர், தமிழகமெங்கும். ஆனால், யாரும் உதவிக்கு வராததோர் சூழ்நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, சண்டாளர்கள், தாக்கினரே கொன்றனரே! ஐயோ, இக் கொடுமையைக் கேட்கவே நமக்கு வேதனை பிறக்கிறதே—அந்த இரவு அக்ரமக்காரர்கள் தாக்கிய போது, எதிர்த்துப் போரிடமுடியாத நிலையில் சூழ நின்று அவரைச் சித்திரவதை செய்தபோது, நம் சாமி அந்தோ! என்னென்ன எண்ணினாரோ, ஏதேது நினைத்தாரோ, எப்படி எப்படித் துடித்தாரோ, வெட்டும் குத்தும் அவர் மீது பாயப்பாய, வெறியர்கள் தாக்கத்தாக்க, நம் சாமி இரத்தம், வெள்ளமாகி ஓட, உயிர் ஊசலாட நின்ற நிலையிலும் வீழ்ந்திடும் போதும், “ஐயோ! திருஇடமே! தாயகமே! பார்! உன் உண்மைத் தொண்டனை இந்த உலுத்தர்கள் உருக்குலைப்பதைப் பார்! ஊருக்கு உழைப்பவனை இந்தக் கொலைபாதகர்கள் கொன்றுபோடும் கொடுமையைப் பார்! பாட்டாளியின் நண்பனை இந்த மாபாவிகள், பதைக்கப் பதைக்க வெட்டுவதைப் பார்! பார்! தாயகமே! பார்!—என்று எண்ணியிருந்திருப்பார்! என் குரல் கேட்டு ஓடிவர, இலட்சக்கணக்கான வீரர்கள் உள்ளனர்—எனக்காக இன்னுயிரும் தர பாட்டாளிகளின் படைவரிசை அணி அணியாக இதே தூத்துக்குடியிலிருக்கிறது எனினும், அவர்கள் எவரும் வர முடியாத நிலையிலே, என்னைக் கொல்கிறார்களே, கொடியவர்கள், என் செய்வேன்” என்று அல்லவா குத்தும் வெட்டும் உடலைத்தாக்கி உயிரைக் குடித்திடும்போது எண்ணியிருந்திருப்பார்.
மலைமலையாக நாம் இருக்கிறோம், அணி அணியாக இருக்கிறோம், நாடெங்கும் இருக்கிறோம், நாசகாலர்கள், நமது சாமியைப் படுகொலை செய்துவிட்டனரே! ஏழைகளின் இன்னல் துடைக்க, அவர்தம் உரிமைக்காக அல்லும் பகலும் பாடுபடும் ஆர்வமிக்க தொண்டராயிற்றே, பொதுத் தொண்டிலே, துள்ளும் பிள்ளைப்பருவ முதற்கொண்டு ஈடுபட்டு, எதிர் நீச்சு நடத்தி ஏற்றம் பெற்றவராயிற்றே! எங்கு அநீதி தலை விரித்தாடினாலும், அக்ரமம் கொக்கரித்தாலும் பாய்ந்து சென்று அதனை எதிர்த்தொழிக்கும் அஞ்சாநெஞ்சனாயிற்றே என்ற எதனையும் எண்ணிபபார்த்தார் இல்லை அந்தக்கொலைபாதகர்கள். ஐயகோ! அவ்வளவு ஆற்றல் படைத்தவர் என்பதற்காகவே அவரை அடித்துக்கொல்லக் கிளம்பிய கொடியவர்களல்லவா, அந்தக் கொலை பாதகர்கள்!
எங்கும் சாமி! எதற்கும் சாமி! எப்போதும் சாமி! எங்கள் சாமி!—என்று நாடே பூரிப்புடன் பெருமிதத்துடன் கூறி-