பக்கம்:தம்பியின் திறமை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

இவ்வாறு சுந்தரம் சொல்லி முடிக்கு முன்பே பொற்கொடி “நீங்கள் சொன்னது அவ்வளவும் உண்மைதான். நான் அது அப்படியே நடந்ததாக முற்றிலும் நம்புகிறேன்” என்று சொல்லிவிட்டாள். சுந்தரமும் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு திரும்பினான்.

மறுநாள் பொழுது விடிந்ததும் வேலுச்சாமி பொற்கொடியிடம் புறப்பட்டான். அவன் சொல்லுவதையும் அவள் உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“நான் பிறப்பதற்கு முன்பே ஒரு வீரச்செயல் புரிந்திருக்கிறேன். அப்பொழுது என் தாய் வயிற்றில் கருப்பைப்பையில் நான் வளர்ந்து வந்தேன். ஒரு நாள் என் தாயார் காட்டு வழியில் தனியாகச் சென்று கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் துணையாக யாருமில்லை. மாலை நேரமாயிற்று. திடீரென்று ஒரு வேங்கைப்புலி பாய்ந்து வந்தது. என்ன செய்வதென்று தோன்றாமல் என் தாயார், நடுங்கிக்கொண்டு அலறினாள். ‘அம்மா பயப்படாதே’ என்று தைரியம் சொல்லிக்கொண்டே நான் கருப்பைப் பையைவிட்டு வெளியே குதித்தேன். அதற்குள்ளே வேங்கைப் புலி மிக அருகிலே வந்துவிட்டது. அதன் மூக்கிலே நான் எனது இரண்டு கைவிரல்களை விட்டு அந்தப் புலியைத் தூக்கித் தரையிலே ஓங்கி அடித்தேன். புலி வீறிட்டுக் கீழே விழுந்து எலும்பெல்லாம் நொறுங்கி மாண்டு போயிற்று. நான் மகிழ்ச்சியோடு மீண்டும் கருப்பைப்பைக்குள் புகுந்து கொண்டேன்.”

வேலுச்சாமி இவ்வாறு சொல்லி நிறுத்துவதற்குள் பொற்கொடி “நீங்கள் சொன்னது அவ்வளவும் உண்மை. அப்படியே நடந்ததாக நான் நம்புகிறேன்” என்று கூறினாள். நான்காவது தம்பியான அவனும் தோல்வியுற்றுத் திரும்பிவிட்டான்.

அடுத்த நாள் பொழுது விடிந்ததும் கடைசித் தம்பியாகிய நல்லமுத்து புறப்பட்டான். பொற்கொடி அவன் கூறுவதையும் கவனமாகக் கேட்கத் தொடங்கினாள்.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் மந்திரத்தீவு என்னும் ஒரு தீவிலே வசித்துவந்தேன். வாணிகம் செய்து