22 ☐ தம்ம பதம்
48. மனிதன் (இன்ப) மலர்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, அவன் தன் இன்பங்களில் திருப்தியடையுமுன், மனம் கலக்க முற்றிருக்கும் போதே, மரணம் அவனை வென்றுவிடுகிறது. (5)
49. மலரிலிருந்து தேன் சேர்க்கும் தேனீ, மலருக்குச் சேதமில்லாமல், அதன் வண்ணமும் மணமும் சிதையாமல், தேனை மட்டும் கொண்டு செல்வது போலவே, முனிவன் கிராமத்தில் நடமாட வேண்டும். (6)
50. முனிவன் தன் குறைகளையும், தான் செய்யத் தவறியவைகளையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்; பிறருடைய குறைகளையும், பாவச் செயல்களையும் அவன் கவனிக்க வேண்டாம். (7)
51. செய்கையில் காட்டாமல் ஒருவன் வாயால் மட்டும் மதுரமாகப் பேசுதல், அழகும் நிறமும் அமைந்த புஷ்பம் வாசனை யற்றிருப்பதுபோல், பயனற்ற தாகும். (8)
52. சொல்லிய வண்ணம் செயல்புரியும் ஒருவனுடைய மதுரமான பேச்சு, அழகும் நிறமும் அமைந்த புஷ்பம் வாசனையும் பெற்றிருப்பது போல், பயனளிப்பதாகும். (9)
53. புஷ்பக் குவியலிலிருந்து பலவித மாலைகள் தொடுக்கப் படுவதுபோல், அநித்தியமான மனிதனும் இந்தப் பிறவியில் பலவித நற்கருமங்களைச் செய்ய முடியும். (10)